மனுஷன் 2 வருஷமா நிற்காம ஓடுறாரு… அவருக்கு ஒரு ப்ரேக் கொடுங்கப்பா..!- இளம் வீரருக்காக முன்னாள் வீரர் பரிந்துரை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தோற்ற பின்னர், இந்தியா- நியூசிலாந்து டி20 தொடர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. புது கேப்டன் ஆக ரோகித் சர்மா இந்திய அணிக்கு வெற்றியத் தேடித் தருவாரா? என்பது போன்ற கேள்விகளும் இருந்தன. ஆனால், அனைத்து கேள்விகளையும் தகர்க்கும் வகையில் இந்திய அணி நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி டி20 வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியது.
அணியின் கேப்டன் ரோகித் சர்மா உட்பட பல இளம், அறிமுக வீரர்களுக்கும் இந்தியா- நியூசிலாந்து டி20 தொடரின் வெற்றி மூலம் பாராட்டுகள் கிடைத்தன. ஆனால், ஒரே ஒருவர் மட்டும் அதிகப்படியான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். அவர், பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆன ரிஷப் பண்ட். நியூசிலாந்து பவுலர்களுக்கு எதிராக ரன்கள் எடுப்பதில் ரிஷப் பண்ட் மிகவும் திணறினார்.
ஒட்டுமொத்தமாக இந்தியா- நியூசிலாந்து டி20 தொடரில் 3 இன்னிங்ஸிலும் சேர்த்து 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் பண்ட். இதன் மூலம் பண்ட் பேட்டிங் செய்வதில் மிகவும் திணறுகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நேரத்தில் ரிஷப் பண்ட்-க்கு ஆதரவாக முன்னாள் இந்திய வீரர் ஆன ராபின் உத்தப்பா பேசியுள்ளார்.
உத்தாப்பா கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடைவிடாமல் விளையாடி வருகிறார் ரிஷப் பண்ட். தொடர்ந்து 2 ஆண்டுகளாக பயணங்கள், போட்டிகள் என்று இருப்பதால் நிச்சயமாக அவர் மனதளவில் அதிகம் சோர்ந்து இருப்பார். எந்த போட்டியாக இருந்தாலும் எவ்வித மறுப்பும் சொல்லாமல் தொடர்ந்து தன்னை அனைத்து ரக போட்டிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
அதுவும் இந்த காலகட்டத்தில் அந்த பயோ-பபிள் பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயே இருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது கூட அவரது ஆட்டத்தில் வெளிப்பட்டு இருக்கலாம். இதனால், ஆட்டத்தில் தெளிவின்மை, மனச்சோர்வு ஆகியன ஏற்பட்டு இருக்கலாம். ரிஷப் ஒரு தரமான விளையாட்டு வீரர். நினைத்ததும் அவரால் மீண்டும் எழுந்துவிட முடியும். அதனால், கிரிக்கெட் இல்லாத ஒரு சிறு ஓய்வு நிச்சயம் அவருக்குத் தேவைப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.