கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லரை அடித்த பிரபல ஐபிஎல் அணியின் உரிமையாளர்? குற்றம் சாட்டிய டெய்லர்! பரபரப்பு தகவல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிரபல ஐபிஎல் அணியின் உரிமையாளர் தன்னை அடித்ததாக ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2022 வரை நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியில் விளையாடியவர் ராஸ் டெய்லர். இக்கட்டான பல நேரங்களில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர். அவருடைய தலைமையில் நியூசிலாந்து அணி பல்வேறு வெற்றிகளை பெற்றது.
உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படும் ராஸ் டெய்லர் T20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வகை போட்டிகளிலும் 450 மேட்ச்களில் விளையாடி 18,199 ரன்களை குவித்திருக்கிறார். 16 ஆண்டு காலம் நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ராஸ் டெய்லர் கடந்த ஏப்ரல் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தன்னுடைய சுயசரிதையை Ross Taylor: Black & White என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் ராஸ் டெய்லர். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் பல தகவல்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் தான் நிறவெறி பேதத்திற்கு ஆளாக்கப்பட்டதாக ராஸ் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அதுபோக ஐபிஎல் அணியின் உரிமையாளர் தன்னை அடித்ததாக ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.
ஐபிஎல்லின் ஆரம்ப ஆண்டுகளில் டெய்லர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் விளையாடினார், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2011 இல் $1 மில்லியனுக்கு டெய்லரை ஏலத்தில் எடுத்தது.
மொஹாலியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டக் அவுட் ஆனபோது, ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் ஒருவர் தன்னை முகத்தில் அறைந்ததாக முன்னாள் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தனது சமீபத்திய சுயசரிதையான “ராஸ் டெய்லர்: பிளாக் & ஒயிட்” இல் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் "மொஹாலியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. 195 ரன் இலக்கை எட்ட ஆடிய போது, நான் எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட் ஆனேன், போட்டி முடிந்த பிறகு, அணியினர், உதவி ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஹோட்டலின் மேல் தளத்தில் உள்ள பாரில் இருந்தனர். லிஸ் ஹர்லி வார்னேயுடன் இருந்தார்.
அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்களில் ஒருவர் என்னிடம், "ராஸ், ஒரு டக் அவுட் வாங்க நாங்கள் உங்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் கொடுக்கவில்லை" என்று கூறி என்னை மூன்று அல்லது நான்கு முறை முகத்தில் அறைந்தார். அறைந்து பின் அவர் சிரித்துக் கொண்டிருந்தார், அவை கடினமான அறைகள் அல்ல, ஆனால் அது முழுக்க முழுக்க சாதாரண விளையாட்டு என்று எனக்குத் தோன்றவில்லை. அந்த சூழலின் நான் அதை ஒரு சிக்கலாக உருவாக்கவில்லை. ஆனால் பல தொழில்முறை விளையாட்டு சூழல்களில் இது போல் நடப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை” என்று ராஸ் டெய்லர் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.