'கேரக்டர்' சரியில்லை... இனி வாய்ப்பு 'கெடைக்குறது' ரொம்பவே கஷ்டம்... இளம்வீரருக்கு 'நேர்ந்த' கதி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Jan 08, 2020 02:44 PM
தோளில் ஏற்பட்ட காயம் உறுதியானதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் இளம்வீரர் பிரித்வி ஷா ஆடமாட்டார் என தெரிகிறது. காயம் குணமாக 3 வாரங்களுக்கு மேல் ஆகும் என்பதால் தற்போது இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்தநிலையில் இனிமேல் அவருக்கு அணியில் இடம் கிடைப்பது கடினம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அறிமுகமான முதல் டெஸ்டிலேயே சதமடித்த பிரித்வி ஷா மீண்டும் அணியில் விளையாடுவது என்பது இனி சிரமமான ஒன்று தானாம். இதற்கு பிரித்வி ஷாவின் காயம் ஒரு காரணமல்ல, ஆனால் அவர் நடந்து கொள்ளும் விதமே அவரின் எதிர்காலத்தை வீணடிப்பதாக கூறப்படுகிறது.
மிகச்சிறப்பான அறிமுகம் கிடைத்தாலும் காயம் காரணமாக அவர் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க பல மாதங்கள் ஆனது. இதற்கிடையில் ஊக்கமருந்து சர்ச்சையால் 8 மாதங்கள் தடை செய்யப்பட்டார். தடைக்குப்பின் ரஞ்சி போட்டியில் மும்பை அணி சார்பாக இடம்பெற்று அரைசதம் அடித்தார். அப்போது தன்னுடைய பேட் தான் பேசும் என அவர் சைகை காட்டியது, பெரும் விமர்சனங்களை எழுப்பியது.
பிரித்வி ஷா ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியது, காயம் அடைந்தது ஆகியவற்றுக்கு அவரின் மோசமான வாழ்க்கை முறைதான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. மும்பை அணிக்கு ஆடிவரும் பிரித்வி ஷா மீது பல்வேறு புகார்கள் உள்ளதாம். சமீபத்தில் கூட மும்பை அணியின் மேனேஜர் பிரித்வி மீது புகார் அளித்துள்ளாராம். இதற்கான காரணம் வெளிப்படையாக கூறப்படவில்லை என்றாலும், தனக்கு கிடைத்த டெஸ்ட் வாய்ப்பை அவர் மிஸ் செய்வதற்கு அவர் நடந்து கொள்ளும் விதம் தான் காரணம் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.