இப்படியொரு என்ட்ரிய யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!.. தெறிக்கவிட்ட பாபா ராம்தேவ்!.. 'பதஞ்சலி' நிறுவனத்தின் மாஸ்டர் ப்ளான் 'இது' தானாம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான பிரதான ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெறுவதற்கு யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் முயற்சி செய்துவருகிறது.

13-வது ஐபிஎல் டி20 போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நவம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடரில் பிரதான ஸ்பான்ஸராக சீனாவின் விவோ நிறுவனம் இருந்தது.
ஆனால், கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்துக்கு இடையிலான மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் அலை நாடு முழுவதும் எழுந்தது.
இதையடுத்து, ஐபிஎல் போட்டிக்கு சீன நிறுவனமான விவோ செல்போன் நிறுவனம் அளித்து வந்த ஸ்பான்ஸர்ஷிப்பையும் இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்து பிசிசிஐ அறிவித்தது. இதனால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்ஸர்ஷிப் யார் என்பது தெரியவில்லை. அதற்கான விருப்ப மனுக்களையும் வரும் 14-ம் தேதிக்குள் அளிக்க பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனத்துடன் 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை ஆண்டுக்கு ரூ.440 கோடி வீதம் ரூ.2,190 கோடி ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தை பிசிசிஐ செய்துள்ளது.
இந்தச் சூழலில் பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் ஐபிஎல் டி20 தொடரின் பிரதான ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.திஜாராவாலா, "ஐபிஎல் டி20 ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெறுவதற்கு பதஞ்சலி நிறுவனம் முயல்கிறது எனும் செய்தியை மறுக்கவில்லை. உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிப்போம் என்ற அடிப்படையில் உள்நாட்டு நிறுவனத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல இந்தப் போட்டித் தொடர் நல்ல களம்.
இதைப் பெறுவதற்கு முயன்று வருகிறோம். ஆனால், இது தொடர்பாக இறுதி முடிவை நிறுவனத்தின் தலைமைதான் எடுக்கும். ஸ்பான்ஸர்ஷிப் கிடைத்தால் எடுக்கலாமா வேண்டாமா என்பதை இறுதியில் முடிவெடுப்போம்" எனத் தெரிவித்தார்.
ஹரித்துவாரைச் சேர்ந்த பதஞ்சலி நிறுவனம் ஆண்டுக்கு ரூ.10,500 கோடி விற்று முதல் கொண்டது. கடந்த 2018-19 ஆம் ஆண்டில் ரூ.8,329 கோடி வருவாயை பதஞ்சலி நிறுவனம் ஈட்டியது. பெரும்பாலான ஆயுர்வேதப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பதஞ்சலி நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

மற்ற செய்திகள்
