‘20 வருசம் ஆச்சு.. ஆனாலும் அவர் சொன்னதை மறக்கல’!.. சென்னை ஹோட்டல் ஊழியர் கொடுத்த அட்வைஸ்.. ஞாபகம் வச்சு சொன்ன சச்சின்.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை ஹோட்டல் ஊழியர் கூறிய அறிவுரை குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் இணையதளம் வழியாக கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது தனது கிரிக்கெட் பயணத்தில் நடந்த பல சுவார்ஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். அதில், ‘விளையாட்டுக்கு உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மனதளவிலும் தயாராக வேண்டும் என்பதை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் தான் உணர்ந்தேன். போட்டி தொடங்குவதற்கு முன், களத்திற்குள் வரும்போதே பதற்றம் அதிகமாக இருக்கும். இந்த பதற்றத்தை 10 முதல் 12 ஆண்டுகளாக உணர்ந்தேன்.
ஒவ்வொரு போட்டிக்கு முன்பும், இரவில் தூங்காமல் இருந்துள்ளேன். தூக்கம் இல்லாத இரவுகளில் என் மனதை சமாதானப்படுத்தினேன். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள சில விஷயங்களை செய்யத் தொடங்கேன். டிவி பார்ப்பது, அதிகாலை வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டேன். டீ போடுவது, என் உடைகளை அயர்னிங் செய்து கூட என்னை போட்டிக்கு தயார் செய்ய உதவியாக இருந்தது.
ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாக, எனது பையில் வைக்க வேண்டிய அனைத்து பொருட்களையும், நானே எடுத்து வைப்பேன். இதை என் சகோதரர் சொல்லிக் கொடுத்தார். இதை இந்திய அணிக்காக விளையாடிய கடைசி போட்டி வரை கடைபிடித்தேன். காயங்கள் ஏற்படும்போது மருத்துவர்கள் உங்களை பரிசோதித்து உங்களிடம் உள்ள குறைகளை கூறிவார்கள். அதேபோல் மன ஆரோக்கியத்திற்கும் இதே மாதிரிதான்.
நாம் யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். ஒருமுறை சென்னையில் நடைபெற்ற போட்டிக்காக ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். அப்போது எனது அறைக்கு வந்த ஊழியர், என்னால் சரியாக பேட்டை சுழற்ற முடியாததற்கு நான் கையில் அணியும் எல்போ கார்டு (Elbow Guard) தான் காரணம் எனக் கூறினார். இது என்னுடைய பிரச்சனைக்கு தீர்வு தேடிக் கொடுத்தது’ என சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் நடந்துள்ளது. சச்சின் குறிப்பிட்ட அந்த ஹோட்டல் ஊழியரின் பெயர் குருபிரசாத், இவர் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வருகிறார்.
எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன
சென்னை டெஸ்ட் தொடரின் போது
Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்
அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்
— Sachin Tendulkar (@sachin_rt) December 14, 2019
கடந்த 2019-ம் ஆண்டும் இவர் குறித்து சச்சின் நினைவு கூர்ந்த நிலையில், தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குருபிரசாத் கூறிய அறிவுரை குறித்து சச்சின் பகிர்ந்தது நெகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.