'ஐபிஎல் போட்டியில் புதிய அணிகள்?’... ‘உரிமையாளர்கள் ஆலோசனை’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 15, 2019 10:23 AM
ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் இருக்கும் நிலையில், கூடுதலாக 2 அணிகளை சேர்க்க, உரிமையாளர்கள் தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது

பிசிசிஐ நடத்தும் இந்தத் தொடரில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. 2011-ல் அதிகபட்சமாக 10 அணிகள் பங்கேற்று விளையாடின. அதன்பின்னர் 2012, 2013-ல் 9 அணிகள் பங்குபெற்றன. தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்றன. இந்நிலையில், ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள், கடந்த வாரம் லண்டனில் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கூடுதலாக இரு அணிகள் சேர்க்கவும் யோசனை தெரிவித்துள்ளனர்.
அஹமதாபாத்தில் இருந்து ஒரு அணியும், புனேவில் இருந்து ஒரு அணியும், ராஞ்சி மற்றும் ஜாம்ஷெட்பூரில் இருந்து ஒரு அணியும், உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் 2 அணிகள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பங்குதாரர்கள் மேலும் சில அணிகளை கூட்டினால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் தான் இந்தக்கூட்டம் லண்டனில் நடந்துள்ளது. இதனை பிசிசிஐக்கு தெரிவித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது.
ஆனால், பிசிசிஐ தரப்பில் அதிக அணிகளை சேர்த்து, முன்பு போன்றதொரு பிரச்சனை வராமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2011-ம் ஆண்டு கேரளா சார்பில், கொச்சி டஸ்கர்ஸ் அணியும், புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளும் வந்தன. பல்வேறு சர்ச்சைகள் காரணமாக அந்த அணிகள் 2 வருடத்திற்கு பிறகு நீடிக்கவில்லை.
