'நீ வாட்ஸ் அப் வாடி மாப்ள... உனக்கு இருக்கு'!.. சொந்த அண்ணனுக்கே ஸ்கெட்ச்சா?.. சிஎஸ்கே கடைக்குட்டி சிங்கத்தின் சேட்டைகள்!.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய ஐபிஎல் போட்டியில் கரன் சகோதரர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களும், சகோதரர்களுமான சாம் கரனும் டாம் கரனும் சர்வதேசப் போட்டிகளில் சமீப காலமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சாம் கரன் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சக்கை போடு போடுகிறார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியிலும் கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றியைப் பறித்துவிட்டார் என்றே கூறலாம். இப்போட்டி முடிந்த கையோடு சென்னை அணிக்காக தல தோனியின் தலைமையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளார். அவரது அண்ணன் டாம் கரன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் விளையாடின. இப்போட்டியில் தல தோனி, சின்ன தல சுரேஷ் ரெய்னா விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதைப்போலவே, கரன் சகோதரர்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும் என்று கருதப்பட்டது.
சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தோனி ஆட்டமிழந்து வெளியேறியவுடன் ஏழாவது வீரராகக் களமிறங்கினார் சாம் கரன். ஆட்டத்தின் 17ஆவது ஓவரை வீச வந்தது அவரது அண்ணன் டாம் கரன்.
இந்த ஓவரில் டாம் கரனின் கையே ஓங்கியிருந்தது. மூன்று பந்துகளை எதிர்கொண்ட சாம் கரன் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் சேர்த்தார். மற்ற மூன்று பந்துகளையும் ஜடேஜா எதிர்கொண்டு 2 ரன் மட்டும் எடுத்தார். டாம் கரன் இந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து, மீண்டும் 19ஆவது ஓவரை வீச டாம் கரன் வந்தார். இந்த முறை அண்ணனின் பந்துவீச்சை ஒருவழி செய்ய வேண்டும் என்று காத்திருந்த சாம் கரனுக்கு முதல் பந்து ஒய்டாகவே வந்தது. மீண்டும் வீசப்பட்ட பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு தெறிக்கவிட்டார் சாம் கரன். அடுத்த பந்திலும் சிக்ஸர். அத்தோடு விட்டுவிடவில்லை. மூன்றாவது பந்தில் பவுண்டரி. கடைசி பந்தில் ஒரு ரன் என, இந்த ஓவரில் மட்டும் சென்னை அணிக்கு 23 ரன்கள் கிடைத்தது. சாம் கரன் இந்த ஓவரில் 16 ரன்கள் விளாசினார்.
டாம் கரனும், சாம் கரனும் ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் போதெல்லாம், அவர்களின் குடும்ப வாட்ஸ் அப் குரூப் ஒரே ரகளையாக இருக்கும் என சாம் கரன் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணனும் தம்பியும், மாறி மாறி குடும்ப வாட்ஸ் அப் குரூப்பிலேயே சண்டை போடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.