'டெஸ்ட் போட்டி நிறுத்தம்'... 'ஆனா அதற்கு முன்னாடி நடந்த சம்பவம்'...'வீரர்கள் என்ன செஞ்சாங்க தெரியுமா'?... அதிர்ச்சி தகவலை வெளியிட்ட திலீப் தோஷி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று பரவல் அச்சத்தால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ரத்து செய்தது இந்திய கிரிக்கெட் அணி.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. மான்செஸ்டரில் கடந்த 10-ந் தேதி தொடங்க இருந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கொரோனா அச்சம் காரணமாக இந்திய வீரர்கள் களம் இறங்க மறுத்ததால் அந்த போட்டி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் 4-வது டெஸ்ட் போட்டியின் போது கொரோனா பாதிப்பைச் சந்தித்ததாலும், அடுத்து உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மரும் கொரோனா தொற்றுக்கு ஆளானதாலும் கலக்கம் அடைந்த இந்திய அணியினர் களம் இறங்க மறுத்ததால் விறுவிறுப்பான இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவுக்கு வராமல் போனது.
இந்த சூழ்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக லண்டனில் உள்ள ஓட்டலில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ரவிசாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியினர், கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் கலந்து கொண்டனர். அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பங்கேற்ற இந்த விழாவில் கலந்து கொண்டதன் விளைவாகத் தான் ரவிசாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியின் பயிற்சியாளர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் இந்திய வீரர் திலிப் தோஷி, (Dilip Doshi) ''புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் யாரும் முககவசம் அணியாமல் கலந்து கொண்ட அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ''ஓட்டல் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் நான் லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். அதில் நிறையப் பிரபலங்கள் மற்றும் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்திய வீரர்கள் உள்பட யாரும் முககவசம் அணியாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்'' எனக் கூறியுள்ளார்.