‘வேற எந்த நாட்டுலையும் இப்படி கிடையாது, இந்தியா டீம்ல மட்டும்தான் இந்த பிரச்சனை’!.. பரபரப்பை கிளப்பிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஎந்த நாட்டு கிரிக்கெட் அணியிலும் இல்லாத பழக்கம் இந்திய அணியில் உள்ளதாக வருண் ஆரோன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை ஒரு வீரருக்கு 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், அவருக்கு அவ்வளவாக அணியில் இடம் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், வயதை காரணம் காட்டி தேர்வு குழு புறக்கணிப்பதாக வீரர்கள் சிலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடிய வருண் ஆரோனும் இந்திய கிரிக்கெட் தேர்வு குழுவை விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘உலகிலேயே இந்திய அணி மட்டும்தான் 30 வயதுக்கு மேல் ஆன வீரர்களால் சிறப்பாக விளையாட முடியாது என்று நினைக்கிறது. மற்ற எந்த நாட்டிலும் இதுபோல் இல்லை. ஆஸ்திரேலிய அணி வீரர் மைக் ஹசி 30 வயதுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், அந்நாட்டு அணியில் இடம்பெற்று விளையாடினார். அதேபோல் 38 வயது நிரம்பிய இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னமும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் அதைப் பற்றியெல்லாம் அங்கு யாரும் கேள்விகளை எழுப்பவில்லை. நன்றாக பயிற்சி பெற்ற ஒரு வீரரால் 30 வயதுக்கு மேல் சிறப்பாக விளையாட முடியாது என்று யாராலும் கூற முடியாது’ என வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.
தற்போது 31 வயதாகும் வருண் ஆரோன் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக இடம்பிடித்து விளையாடி வந்தார். ஆனால் தொடரந்து காயங்களினால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, 2015-ம் ஆண்டுக்கு பின் இந்திய அணயில் இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து பேசிய அவர், ‘என்னுடைய வாழ்கையில் 3-4 வருடங்களை காயங்களால் இழந்து விட்டேன். எனக்கு இப்போது 31 வயதாகிறது. ஆனால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் கடினமாக உழைத்து உடலைப் ஃபிட்டாக வைத்திருப்பதால் எனக்கு 26 அல்லது 27 வயதுதான் ஆகிறது என எனக்கு தோன்றுகிறது.
அதனால் டெஸ்ட் போட்டிகளில் என்னால் சிறப்பாக பந்துவீச முடியும். டெஸ்ட் போட்டியில் ஒரு வேகப்பந்து வீச்சாளர், தொடர்ந்து 140 கிலோ மீட்டருக்கு மேல் பந்துவீச வேண்டும் என்றுதான் அனைவரும் எதிர்பார்ப்பர்கள். என்னால் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் பந்துவீச முடியும்’ என வருண் ஆரோன் கூறியுள்ளார்.
இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன் ரஞ்சி ட்ராபியில் சிறப்பாக பந்து வீசிய ஜெய்தேவ் உனத்கட்டும், வயதை காரணம் காட்டி தான் இந்திய அணியில் புறக்கணிக்கப்படுவது குறித்து வேதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வருண் ஆரோனும் இதே குற்றச்சாட்டை வைத்துள்ளது, இந்திய அணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
