‘எல்லாராலும் தோனியாக முடியாது’!.. அந்த பையனுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. ரிஷப் பந்துக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்துக்கு ஆதரவாக ஆஷிஸ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப்போட்டி நாளை (15.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
முன்னதாக ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடந்த ப்ளே ஆஃப் சுற்றின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.5 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெல்லி அணி, ப்ளே ஆஃப் சுற்றுகளில் சொதப்பியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்தை (Rishabh Pant) பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா (Ashish Nehra), ரிஷப் பந்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘டெல்லி அணி அடுத்த ஆண்டும் ரிஷப் பந்தை கேப்டனாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அவர் இன்னும் அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டும். சில போட்டிகளை தவிர ரிஷப் பந்த் நன்றாகவே கேப்டன்ஷி செய்தார்.
எல்லோராலும் தோனி (Dhoni) போல் ஆக முடியாது. அவர் 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக அறிமுகமாகி டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். ஆனால் ரிஷப் பந்துக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். அவர் மிகவும் இளம் வீரராக இருக்கிறார். நிச்சயம் அடுத்த ஐபிஎல் சீசன் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்படுவார். அதனால் அவருக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பை கொடுங்கள்’ என ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார்.