இதுதான் ‘தல’-யோட கடைசி ஐபிஎல் சீசனா..? சிஎஸ்கே CEO ‘சூசகமாக’ சொன்ன பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த வருட ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுகிறாரா? என்ற கேள்விக்கு சிஎஸ்கே சிஇஓ சிறப்பு பதிலளித்துள்ளார்.
14-வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை (09.04.2021) தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்கு அடுத்த நாள் (ஏப்ரல் 10-ம் தேதி) மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளன. இதற்காக மும்பை சென்றுள்ள சிஎஸ்கே வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறியது. இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் கேப்டன் தோனி, கேதர் ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள் மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதில் கேதர் ஜாதவை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி விடுத்தது. தற்போது சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி இவரை ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. அந்த வருட ஐபிஎல் தொடர் முழுவதும் இது பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிஎஸ்கே அணியின் கடைசி போட்டியில், ‘கண்டிப்பாக ஓய்வு பெறவில்லை’ என தோனி கூறினார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் The Indian Express ஊடகத்துக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அப்போது இந்த வருட ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற உள்ளாரா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ‘இது அவருடைய இறுதி ஆண்டாக இருக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து’ என சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.