‘ஜூனியர் உலகக் கோப்பை மோதல் விவகாரம்!’.. ‘2 அணியையும் சேர்ந்த இந்த 5 வீரர்களும்’.. ஆக்‌ஷனில் இறங்கிய ஐசிசி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Feb 12, 2020 09:29 AM

கடந்த 9-ஆம் தேதி நடந்த 13வது ஜூனியர் உலகக் கோப்பை (U19) இறுதிப் போட்டியில் 4 முறை சாம்பியனான இந்திய அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் முறையாக வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.

5 players penalised after altercation in U19 Cricket World Cup

ஆனால் வெற்றி பெற்ற பிறகு பங்களாதேஷ் அணி வீரர்கள் மைதானத்துக்குள் ஓடிவந்து சந்தோஷத்தை வெளிப்படுத்தியதோடு, இந்திய வீரர்களை சீண்டும் வகையில் அருகே சென்று கூச்சலிட்டனர். இதனால் கடுப்பான இந்திய வீரர்களுக்கும் பங்களாதேஷ் வீரர்களுக்குமான மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

இதனை அடுத்து இரு அணியின் கேப்டன்களும், சூழலை சமாளித்து சமநிலைக்குக் கொண்டு வர முயற்சித்தனர். பின்னர் மோதல் முடிவுக்கு வந்தது. எனினும் யு19 இந்திய அணியின் மேலாளர் அனில் படேல் கூறும்போது, போட்டி முடிந்தபின் பங்களாதேஷ் வீரர்கள் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியூட்டியதாகவும், அவர்களின் நடத்தையை சிசிடிவி கேமராவை பார்த்து பரிசோதித்துக்கொள்ளவும் என்றும் தெரிவித்திருந்தார்.

தவிர, இந்த போட்டிக்கு பின் நடுவர் தன்னிடம் வருத்தம் தெரிவித்ததாகவும், இதுகுறித்து ஐசிசி தரப்பில் இருந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வாக்கு கொடுத்ததாகவும் அனில் படேல் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக பங்களாதேஷ் அணியின் கேப்டன் அக்பர் அலி, தம் அணியினர் அவ்வாறு நடந்துகொண்டதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார்.  பின்னர் நடுவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து ஜூனியர் உலக கோப்பை போட்டி நடுவர் கிரேமி லாப்ரூய் நடத்திய விசாரணையில் இந்திய அணி வீரர்கள் ஆகாஷ் சிங், ரவி பிஷ்னோய், வங்காளதேச அணி வீரர்கள் முகமது தவ்ஹித் ஹிரிடாய், ஷமிம் ஹூசைன், ரகிபுல் ஹசன் ஆகியோர் விதிமுறையை மீறி செயல்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் ஐசிசி விதிமுறைக்கு புறம்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் ஆகாஷ்சிங்குக்கு 8 இடைநீக்க புள்ளியும், ரவி பிஷ்னோய்க்கு 7 தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. தவிர, வங்காளதேச அணி வீரர்கள் முகமது தவ்ஹித் ஹிரிடாய்க்கு 10 இடைநீக்க புள்ளியும், ஷமிம் ஹூசைனுக்கு 8 இடைநீக்க புள்ளியும், ரகிபுல் ஹசனுக்கு 4 இடைநீக்க புள்ளியையும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடைநீக்க புள்ளியை அபராதமாக பெறும் வீரர் ஒருவர், ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில், ஒரு 20 ஓவர் போட்டியில்,  ஒரு 19 வயதுக்கு உட்பட்ட ஆட்டத்தில், ஒரு அதிகாரபூர்வ ‘ஏ’ அணி போட்டியில் என ஏதேனும் ஒன்றில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தண்டனை புள்ளிகள் அடுத்த 2 ஆண்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், இந்த வீரர்கள் அடுத்து விளையாடவிருக்கும் சர்வதேச போட்டியின் போது, இவை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #U19WORLDCUP