‘ஸ்ட்ரெஸ்’ ஒருவகையில் நல்லது... இது ‘புதுசால்ல’ இருக்கு!... ‘ஆச்சரியம்’ கொடுக்கும் ‘ஆய்வு’ முடிவு...
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுபவருக்கு அதனால் ஒரு சில நன்மைகளும் கிடைப்பதாக ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது.

மன அழுத்தம் காரணமாக உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மன அழுத்தத்தால் தீமைகள் மட்டுமே ஏற்படுவதில்லை, ஒருசில நன்மைகளும் கூட ஏற்படுகின்றன என ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. அந்த ஆய்வு முடிவில், “ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது அவருடைய நட்பு வட்டம் அதிகரிக்கிறது. அந்த சமயத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் தன் கவலைகளைப் பகிர்ந்துகொள்ள மற்றொருவரை நாடுகிறார். அது அவர்களுடைய நட்பு வட்டத்தை இன்னும் பிணைப்புடன் வைத்துக்கொள்ள உதவுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் 1,622 பேரை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மற்றவர்களுடன் பகிர்வதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருப்பதிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவந்துள்ளது. அதேபோல, இன்று மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருபவர், நாளை மற்றவர்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது அவர்களுக்கு நல்ல ஆதரவாளர்களாக இருக்கின்றனர் எனவும் அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள ஆய்வாளர் அல்மெய்தா, “சாதாரண நாட்களில் நாம் வேலைகள் முடிந்ததும் நம்மைச் சுற்றியிருப்பவர்களைக் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் மன அழுத்தம் வரும்போது ஆதரவுக்காக நம்மைச் சுற்றி இருப்பவர்களை நாடுகிறோம். எனவே மன அழுத்தம் ஒருவகையில் நல்லதுதான். இதனால் தெரிந்தவர்கள் மட்டுமல்லாமல் புதிய நண்பர்களும் உருவாகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
