கால்களால படம் வரஞ்சுதான் பாத்திருப்பீங்க.. இது புதுசு.. என்னது இதெல்லாம் கூடவா பண்ணுவாங்க..?!
முகப்பு > செய்திகள் > கதைகள்By Saranya | May 19, 2019 06:09 PM
அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயது ஜெசிகா கால்களால் விமானத்தை இயக்கும் முதல் பெண் பைலட் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
பிறந்தது முதலே இரண்டு கைகளும் இல்லாத ஜெசிகா கால்களாலேயே விமானம் ஓட்டப் பழகி பைலட்டாகி சாதனை படைத்துள்ளார். சிறுவயதிலிருந்து நடனம், டேக்வாண்டோ, நீச்சல் என தினமும் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக் கொண்டே வளர்ந்த இவர், “தன்னுடைய பெற்றோர் தன்னை மிகவும் தைரியமானவளாக வளர்த்ததாலேயே இது அனைத்தும் சாத்தியமானது” எனக் கூறுகிறார்.
கைகள் இல்லாத குறையே தெரியாமல் வளர்ந்த ஜெசிகாவுக்கு விமான கண்காட்சி ஒன்றுக்கு சென்ற போது விமானம் மீதான ஆர்வம் தொடங்கியுள்ளது. அப்படி ஒரு கண்காட்சியில் பைலட் ஒருவர் முதல்முதலாக இவரை விமானி இருக்கையில் அமர வைத்து விமானத்தை எப்படி இயக்குவது என விளக்கியுள்ளார். அப்போதுதான் தன்னாலும் விமானத்தை இயக்க முடியும் என இவருக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.
பின்னர், ஸ்போர்ட்ஸ் ரக விமானங்களே தான் ஓட்டுவதற்கு சரியாக இருக்குமெனக் கண்டுபிடித்து, 3 ஆண்டுகள் அதை இயக்க முறையாகப் பயிற்சி பெற்றுள்ளார். சிறப்பாக விமானத்தை இயக்கத் தொடங்கி லைசென்ஸ் பெற்றுள்ள இவர் டேக்வாண்டோவில் பிளாக் பெல்ட், மிகச் சிறந்த ஸ்கூபா டைவர், பேச்சாளர் என இன்னும் பல திறமைகளுக்குச் சொந்தக்காரர். பயணத்தில் அதிக ஆர்வமுள்ள இவர் இதுவரை 20 நாடுகளுக்குப் பயணித்துள்ளார்.