"கத்துன சத்தம் கேட்டதும்".. ஃபிரிட்ஜ் வெடிச்ச பிறகு நடந்தது என்ன??.. பக்கத்து வீட்டார் சொன்ன பரபரப்பு சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசெங்கல்பட்டு பகுதியை அடுத்துள்ள ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் வசித்து வந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி கிரிஜா.
இவர்களின் மகளான பார்கவியை கிரிஜாவின் தம்பியான ராஜ்குமார் திருமணம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ராஜ்குமார் - பார்கவிக்கு ஆராத்யா என்ற மகளும் உள்ளார்.
இதனிடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெங்கட்ராமன் உயிரிழந்த நிலையில், தனது மகள் பார்கவி மற்றும் ராஜ்குமார் ஆகியோருடன் துபாயில் சென்று வசித்துள்ளார் கிரிஜா.
இதனைத் தொடர்ந்து கணவர் உயிரிழந்து முதலாமாண்டு திதி கொடுப்பதற்காக கிரிஜா, ராஜ் குமார், பார்கவி மற்றும் ஆராத்யா ஆகியோர் துபாயில் இருந்து ஊரப்பாக்கத்தில் உள்ள தங்களின் வீட்டிற்கு வந்துள்ளனர். மேலும் கிரிஜாவின் சகோதரியான ராதாவும் வந்துள்ளார். திதி கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில் தான் துயர சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.
இரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருக்க, அங்கிருந்த ஃபிரிட்ஜ் வெடித்து சிதறி உள்ளது. இந்த விபத்தில் கிரிஜா, ராதா மற்றும் ராஜ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மறுபுறம் அறையில் இருந்த பார்கவி மற்றும் ஆராத்யா ஆகியோர் உயிர் பிழைத்தனர். கடந்த ஒரு வருடமாக அந்த வீட்டில் யாருமே இல்லை என்ற நிலையில், துபாயில் இருந்து வந்த பிறகு ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.
அப்படி தான் அங்கே மின்கசிவு ஏற்பட்டு ஃபிரிட்ஜ் வெடித்ததால் அதிலிருந்து வந்த புகையால் மூன்று பேரும் உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அதே அபார்ட்மெண்ட்டில் இருக்கும் நபர் ஒருவர் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
"அவரது கணவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதன் பின்னர் தனது மகளுடன் துபாயில் வசித்து வரும் அவர் தற்போது கணவரின் நினைவு தினத்திற்காக இங்கே வந்தபோது தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது. உள்ளே இருந்த அனைவரும் கத்தி இருக்கிறார்கள். வெளியே கிரில் லாக் செய்யப்பட்டு, உள்ளே கதவும் இரண்டு தடவை லாக் செய்யப்பட்டிருந்ததால் அவர்களால் உடனடியாக வெளியேறவும் முடியாமல் போய்விட்டது. அவர்கள் கத்திய சத்தம் கேட்டு ஒவ்வொருவராக வந்த பிறகு கதவை உடைத்து கொண்டு உள்ளே நாங்கள் சென்ற சமயத்திலேயே அந்த மூன்று பேரும் இறந்து விட்டனர்.
அங்கே இருந்த மகள் மற்றும் ஒரு ஆறு வயது பெண் குழந்தையையும் நாங்கள் பத்திரமாக மீட்டோம். மற்ற யாரையும் உயிருடன் மீட்க முடியவில்லை. காப்பாத்துங்க என கத்திய பிறகு என்ன செய்வது என்று நாங்கள் முடிவு எடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போவதற்கும் சில நேரங்கள் எடுத்துக் கொண்டு விட்டது. ஒரு அறையில் பார்கவி மற்றும் அவரது மகளும், மற்றொரு அறையில் உயிரிழந்த மூன்று பேரும் இருந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல வீட்டில் உள்ள பாத்ரூமில் ராஜ்குமார் உயிரிழந்து கிடந்ததாகவும் மற்ற இரண்டு பேரும் கட்டிலுக்கு அருகே இறந்து கிடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பேசியிருந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், "பிரிட்ஜ் வெடித்ததும் அதன் கேஸ் அறை முழுவதும் பரவியது. ஜன்னல்கள் அனைத்தும் மூடி இருந்ததால் அவை வெளியே செல்லவும் வழி இல்லாமல் போனது. பொதுமக்களிடம் ஒரு வேண்டுகோள் என்னவென்றால், பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட மின்சார சாதனங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கும் போது டெக்னீசியன் அறிவுறுத்தலுடன் பயன்படுத்துங்கள்" என அவர் அறிவுறுத்தி உள்ளார்.