'கல்லூரிகளில் இந்தி கட்டாயம்'... 'மீண்டும் சர்ச்சையை கிளப்பிய யுஜிசி சுற்றறிக்கை’!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Jun 26, 2019 01:38 PM
கல்லூரிகளில் இளங்கலை பட்டம்பெற இந்தி கட்டாயம் என, பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியில் 2-வது முறையாக பாஜக அரசு பதவி ஏற்றவுடன், புதிய கல்விக் கொள்கை வகுக்க கஸ்தூரி ரங்கன் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில் 6-ம் வகுப்பு முதல், 3-வது மொழியாக இந்தி மொழியை கட்டாயப் பாடமாக படிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அத்திட்டத்தை அமல்படுத்தவில்லை என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் இந்தி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என, அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. முதல் கட்டமாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்தத் திட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த திங்கள்கிழமையன்று போராட்டம் நடத்தியதோடு, சுற்றறிக்கையை தீயிட்டுக் கொளுத்தினர்.
இது, இந்தியை திணிக்கும் மற்றொரு முயற்சியாக கருதப்படுவதால், இதற்கு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, 'அக்கடிதம் கட்டாய உத்தரவு அல்ல எனவும், கருத்து கேட்பதற்காக சில பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைத்ததாகவும்' யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.
