'சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி...' 'RT-PCR டெஸ்ட் மூலம் தெரிந்தது...' - கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரு சிறையில்இருந்த சசிகலாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊழல் வழக்குத் தொடர்பாக சிறைக்கு சென்ற சசிகலா வரும் நாட்களில் தண்டனை முடிந்து விடுதலை ஆவார் என்ற செய்தி கடந்த வாரங்களில் வெளியாகியது. இந்நிலையில், நேற்று சிறையில் இருந்த சசிகலாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, பவ்ரிங்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு வந்தது.
அதன் பின் அம்மாருத்துவமனையில், சிடி ஸ்கேன் உள்பட சில வசதிகள் இல்லாததால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சசிகலா அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும். தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக உள்ளது எனவும், நுரையீரல் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சசிகலாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சசிகலாவுக்கு இன்று (21-01-2021) நடத்தப்பட்ட ஆர்டி பிசிஆர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையிலுள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார்.