"வலியை பத்தி கவலை இல்ல!.. இதுதான் முக்கியம்!".. 'சூரரைப் போற்று-2' எனக்கூறி, நிஜவாழ்க்கையில் புகழாரம்.. வைரல் ஆகும் பெண்மணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாசூர்யா நடித்த சூரரைப் போற்று படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. எளிய மக்களுக்கு குறைந்த விலையில் விமான சேவை அளிக்க முயற்சித்து போராடி வெல்லும் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் Simply Fly என்கிற சுயக்கதையை தழுவி எடுக்கப்பட்டதுதான் இப்படம்.

இந்நிலையில் இதேபோன்று நிஜவாழ்க்கையில் சுயமாக போராடி பெரும் சாதனைகளை படைத்து கவனத்துக்கு வராதவர்கள் பற்றி இணையசாசிகள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், FrontLine பத்திரிகையாளர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில், ஒரு பெண்மணியின் புகைப்படத்தை பகிர்ந்துவிட்டு, “ரேலு வசாவே. இருபத்தேழு வயதேயான இவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் நந்தர்பார் மாவட்டத்திலிருக்கும் சிமல்காடி என்கிற பழங்குடியினர் கிராமத்திலிருக்கும் அங்கன்வாடியின் ஊழியர். புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஆறு வயது நிரம்பும் வரை உடல்நலத்துடன் இருக்கிறார்களா, கருவுற்றிருக்கும் பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் மருந்துகளும் கிடைக்கின்றனவா என்று கண்காணித்து அவற்றைத் தொடர்ந்து வழங்குவதுதான் ரேலுவின் பணி.
நர்மதை ஆற்றங்கரையிலிருக்கும் அந்த அங்கன்வாடிக்கு கருவுற்றிருருக்கும் பழங்குடியினப் பெண்களும் குழந்தைகளும் படகில் வந்து உணவு வாங்கிச் செல்வது வழக்கும். கொரோனா பயத்தினால் அவர்கள் அங்கன்வாடிக்கு வருவது நின்று விட்டது. கவலையடைந்த ரேலு ஒரு மீனவரின் படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். ஊட்டச் சத்துகளையும் குழந்தைகளின் எடையை அளக்கும் இயந்திரத்தையும் ஏற்றிக் கொண்டு காலை 7.30க்குக் கிளம்பும் ரேலு, 18 கிமீ பயணம் செய்து, 25 பச்சிளம் குழந்தைகள், ஊட்டச் சத்து கிட்டாமல் நலிவுற்றிருக்கும் குழந்தைகள், ஏழு கருவுற்றிருக்கும் பெண்களுக்குத் தேவையான ஊட்டத்தை அளித்து வருகிறார்.
சிறு மருத்துவ உதவிகளையும் செய்கிறார். படகில் சென்று கரையிறங்கியவுடன் பொருட்களை எடுத்துக் கொண்டு மீண்டும் மலையில் ஏறித்தான் கிராமங்களை அடைய வேண்டும். ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் 5 நாட்கள் இதைத் தொடர்ந்து இன்று வரை செய்கிறார். நர்மதை ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்த ஜூலை மாதத்தில் மட்டும் அவர் கிராமங்களுக்குச் செல்லவில்லை.” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இரு குழந்தைகளுக்குத் தாயான ரேலு இதுபற்றி கூறும்போது “ஒவ்வொரு நாளும் படகை வளைப்பது எளிதல்ல. மாலையில் நான் திரும்பி வருவதற்குள் கைகள் வலிக்கும். ஆனால் அதில் எனக்கு கவலையில்லை. குழந்தைகளுக்கும் கருவுற்றிருக்கும் பெண்களுக்கும் தேவையான ஊட்டச் சத்து கிடைப்பதுதான் முக்கியம். கோவிட் சூழலில் முன்னேற்றம் ஏற்படும் வரையில் நான் இதைச் செய்வேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
