'13.6 கோடி பேர் வேலை இழக்க வாய்ப்பு...' 'உள்நாட்டு உற்பத்தி சதவீதம் வீழ்ச்சி...' பொருளாதார வல்லுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் உலக அளவில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி சதவீதம் பெருமளவு வீழ்ச்சி கண்டுள்ளதால் 13.6 கோடி பேர் வேலை இழக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

உலக தொழிலாளர்கள் அமைப்பு, 'கொரோனாவால், உலக அளவில், 2.5 கோடி பேர் வேலை இழக்க நேரிடும்' எனக் கூறியிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான, 'மிண்ட்' பத்திரிகையின் அறிக்கையில், 'கொரோனா வைரஸ் தொற்றால், இந்தியாவில் மட்டும், 13.6 கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழக்கும் ஆபத்தில் உள்ளனர்' எனத் தெரிவித்திருந்தது.
இந்த கணிப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த நிலையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டியவை குறித்தும், மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரும் பொருளாதார வல்லுனருமான ரகுராம் ராஜன் கூறுகையில் \:
கடந்த 2008 - 09ம் நிதியாண்டில் உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அந்த நெருக்கடி மிகுந்த கால கட்டத்தில் மக்களால் பணிக்குச் செல்ல முடிந்தது. அனைத்து நிறுவனங்களும் கடந்த காலங்களை விட வெகு சிறப்பாக செயல்பட்டன. இந்திய நிதி அமைப்புகள் வலுவாக இருந்தன. அரசின் கஜானாவும் பலமாக இருந்தது. ஆனால் இப்போது கொரோனாவுக்கு எதிராக நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். இந்த காலத்தில் மேலே சொன்ன எதுவுமே இல்லை.
சுதந்திரம் பெற்றதில் இருந்து, இந்தியாவின் பொருளாதாரம் இப்படி ஒரு அவசர காலத்தை சந்தித்ததில்லை. இதனால், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடிந்த பிறகும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும் என, அரசு விரைவாகத் திட்டமிட வேண்டும்.
ஊரடங்கை தொடர்வது இந்தியாவில் மிகவும் கடினமான ஒன்று. எனவே, கொரோனா அதிகம் பரவாத இடங்களில், தேவையான முன் எச்சரிக்கைகளுடன், சில பொருளாதார நடவடிக்கைகளை எப்படித் துவங்குவது என, ஆலோசிக்க வேண்டும்.
மேலும், இந்த தொகை ஒரு குடும்பத்துக்கு ஒரு மாத காலம் வாழ போதாது. இதனால், இரண்டு பெரிய இடர்களை எளிய குடும்பங்கள் சந்திக்கும்.ஒன்று, தங்கள் சொந்த மாநிலங்களை விட்டு, வேறு மாநிலங்களுக்கு வந்து வேலை பார்க்கும் கடை நிலை ஊழியர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள், இந்த கொரோனா பாதிப்பால், மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கே திரும்புவர். இது தற்போது நடந்து வருகிறது. அது மேலும் அதிகரிக்கும். அடுத்தது, பிழைப்புக்கு வழி இல்லை என்றால், அவர்கள் ஊரடங்கை பெரிதாகக் கண்டு கொள்ளமாட்டார்கள். தங்கள் பிழைப்பை உறுதி செய்ய, ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்லத் துவங்குவர். இதனால், கொரோனா பரவல் அதிகரிக்கும். நிலைமை மேலும் மோசமடையும்.
இந்த நிலையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, 3.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் 13.6 கோடி தொழிலாளர்கள் வேலை இழக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ளதை சமாளிக்க, மத்திய அரசு, கட்சி பேதமின்றி பொருளாதார வல்லுனர்களை ஒன்றிணைத்து, இந்த நிலையை சமாளிப்பது குறித்து ஆலோசிப்பது அவசர அவசியம். இவ்வாறு அவர் அரசிற்கு தன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
