'ஆன்லைன் உணவு டெலிவரியிலிருந்து வெளியேறும் பிரபல நிறுவனம்?'...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | May 22, 2019 03:21 PM
ஃபுட் பாண்டா நிறுவனம் மூலம் உணவு டெலிவரியில் ஈடுபட்டு வரும் ஓலா, தற்போது அதிலிருந்து ழுழுமையாக வெளியேறவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்விகி, ஜொமேட்டோ, உபர் ஈட்ஸ் (Swiggy, Zomato, Ubereats) போன்றவை உணவு வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்களாகும். இந்த வரிசையில் ஃபுட் பாண்டா என்ற நிறுவனத்தை 2017-ன் இறுதிவாக்கில் கையகப்படுத்திய ஓலா நிறுவனம் இத்துறையில் கால்பதித்தது.
ஃபுட் பாண்டா மூலமாக 18 மாதமாக இத்துறையில் செயல்பட்டு வரும் ஓலா நிறுவனம், தற்போது போட்டியாளர்களின் நெருக்கடியை சமாளிக்க இயலாமல் இத்துறையில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. பல்வேறு உணவகங்களை தங்களது பட்டியலில் இருந்து ஃபுட் பாண்டா நீக்கி வருவதாக கூறப்பட்டது.
மேலும் அந்நிறுவனத்தின் இடைநிலை ஊழியர்கள் 40 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்பட்டது. அதேபோல அதன் டெலிவரி ஏஜெண்டுகள் 1,500 பேரை சிறிது சிறிதாக பணிநீக்கம் செய்யப்போவதாகவும் தெரியவந்தது. ஸ்விகி, ஜொமேட்டோ (Swiggy, Zomato) போன்ற நிறுவனங்கள் உணவு வர்த்தகத்தில் அதிக அளவிலான முதலீட்டை மேற்கொள்கின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான ஆஃபர்களை அந்நிறுவனங்கள் அளித்து வருகின்றன.
உணவு டெலிவரி தொழிலில் கடந்த 2015-ம் ஆண்டில் ஓலா கஃபே மூலம் ஓலா காலடி எடுத்து வைத்தது. அதன்பிறகு ஒரே ஆண்டில் அத்தொழிலை அந்நிறுவனம் கைவிட்டது. இந்நிலையில், தற்போது ஃபுட் பாண்டா உணவு வர்த்தகத்தை, அதனுடைய தரத்தை மேம்படுத்துவதற்காக, குறைந்த அளவிலான வர்த்தகத்தை மட்டும் மேற்கொள்ள ஓலா முடிவு எடுத்துள்ளது. முழுவதுமாக உணவு டெலிவரியை நிறுத்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும் ஓலா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது உணவு டெலிவரி துறையில் குறிப்பிட்ட அளவில் வெளியேறினாலும், அதன் பிரத்யேக கிளவுட் கிச்சன் சேவையை மட்டும் ஓலா தொடர உள்ளதாக தெரிகிறது. Flrt, The Khichdi Experiment, Lovemade மற்றும் Grandma’s Kitchen என்ற 4 பிராண்டுகளில், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சுமார் 50 கிச்சன்களை அந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இதன் மூலம் ஜூஸ் வகைகள், பிரியாணி, கிச்சடி போன்ற உணவு வகைகள் டெலிவரி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.