'வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கியது'... 'வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 23, 2019 08:55 AM

நாடு முழுவதும் 17-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

lok sabha vote counting begins today morning at 8 am

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்து இருக்கிறது. கடந்த 19-ந் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

எனவே மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது இன்று தெரிந்துவிடும். இதேபோல் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதும் தெரிந்துவிடும்.

தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புகள் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியது. இதனால், இன்றைய தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மக்களவை தொகுதிகளுடன் 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர், எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி தேர்வு செய்யப்பட்டு, அந்த எந்திரங்களில் பதிவான வாக்குகள் மட்டும், ஒப்புகைச்சீட்டு எந்திரத்துடன் சரிபார்க்கப்படும். இதனால், முன்னணி நிலவரங்கள் விரைவில் வெளியானாலும், முடிவுகள் அறிவிக்கப்படுவது தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்சி முகவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.