'P.HD முடிச்சிட்டு டாக்டரா வருவான்னு தானே இருந்தோம்'... 'மொத்த கனவையும் நொறுக்கிய காது வலி'... ஏர்போர்ட்டில் நடந்த துயரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆயிரம் கனவுகளோடு ஆராய்ச்சி படிப்பு படிக்கச் சென்ற மாணவிக்கு விமானநிலையத்தில் நடந்த துயர சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோஸ். இவரது மனைவி ஷெர்லி. இந்த தம்பதியரின் மகள் லீஜா ஜோஸ், கடந்த 4 வருடங்களாகத் தென் கொரியாவில் ஆராய்ச்சி படிப்பை (P.hd) மேற்கொண்டு வருகிறார். பெற்றோரைப் பார்ப்பதற்காகக் கடந்த பிப்ரவரி மாதம் கேரளா வந்த அவர், கொரோனா பரவல் காரணமாக உரிய நேரத்தில் தென் கொரியா செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதையடுத்து கடந்த 6 ஆம் தேதி தென் கொரியா திரும்பிய ஜோஸ், 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.
இதற்கிடையே தனிமைப்படுத்தலில் இருந்த நேரம் பார்த்து அவருக்கு திடீரென காது வலி ஏற்பட்டுள்ளது. சாதாரண வலியாக இருக்கும் என நினைத்த அவர் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம் என முயன்ற நிலையில், அது அவருக்குக் கிடைக்காமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் காது வலியோடு சேர்ந்து முதுகு வலியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதையடுத்து சொந்த ஊருக்கே சென்று அங்குச் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என நினைத்த ஜோஸ், கேரளா திரும்ப முடிவு செய்துள்ளார். வெள்ளிக்கிழமை டிக்கெட் புக் செய்த ஜோஸ் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். விமான நிலையத்திலிருந்த அவருக்கு திடீரென காது வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது சிறிது நேரத்தில் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்து லீஜா ஜோஸ் இறந்த தகவல் இந்தியத் தூதரகம் மூலமாக அவரின் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆராய்ச்சி படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசையாகச் சென்ற மகளின் இறப்புச் செய்தியைக் கேட்ட பெற்றோர் கதறித் துடித்தார்கள். இதனிடையே லீஜா ஜோஸ் உடலை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அங்குள்ள அரசியல் தலைவர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.