'கேரள அரசை பாராட்டிய ஐ.நா சபை...' 'கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக...' இந்தியாவில் இருந்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டும் பங்கேற்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கேரள மாநிலம் விரைந்து கட்டுப்படுத்தி, உயிரிழப்பையும், பாதிப்பையும் குறைத்த கேரள அரசுக்கு ஐ.நா.சபை பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஒரே ஒருவரும் அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சருமான கே.கே.ஷைலஜா மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.
ஐ.நா. சபையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23-ம் தேதி பொதுச்சேவை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கொண்டாடப்பட்ட அந்த நாளில் கொரோனா வைரஸை பரவலைக் கட்டுப்படுத்தி உயிரிழப்பையும், பாதிப்பையும் குறைத்த கேரள அரசுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இதில் இந்தியாவின் சார்பில் கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டும் அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்று அவர் பேசுகையில், “கேரளாவில் நிபா வைரஸைத் திறம்படக் கையாண்ட அனுபவம் கொரோனா வைரஸ் பரவலை வெகுவாக கட்டுப்படுத்த உதவியது. நாங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கிய உடன் கேரள அரசு விழிப்புடன் செயல்பட்டோம், மேலும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களை தீவிரமாக பின்பற்றினோம்.
எந்த ஒரு வழிகாட்டலையும் நாங்கள் அலட்சியம் செய்யவில்லை. இதன் காரணமாக கேரளாவில் கொரோனா பரவல் 12 சதவீதத்துக்கும் கீழாகவே இருந்தது. உயிரிழப்பும் 0.6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த முடிந்தது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் உடனுக்குடன் கண்டறியப்பட்டது. உடனே அவர்களுடன் தொடர்பில் இருந்தோரைத் தேடிக் கண்டறிந்து பரிசோதனையைத் தீவிரப்படுத்தினோம், இதன் மூலம் கொரோனா பரவலை எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது. மேலும் ரிவர்ஸ் குவாரண்டைன், பிரேக் த செயின் பிரச்சாரம் போன்ற விஷயங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது” என்று அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார்.
இந்தியாவில் முதன்முதலாக கொரோனாவில் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா ஆகும். சீனாவிலிருந்து திரும்பிய மூன்று மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர்களை குணப்படுத்தியது. தற்போதைய நிலவரப்படி கேரளா மாநிலத்தில் 3,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,809 பேர் குணமடைந்துள்ளனர். 22 பேர் கொரோனாவினால் மரணம் அடைந்துள்ளனர்.