'ரோட்டுக்கு 5 கோடி'...'ஜன்னலுக்கு இத்தனை லட்சமா?...தலை சுற்ற வைக்கும் 'முதல்வரின் வீட்டு பட்ஜெட்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Nov 07, 2019 05:06 PM
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்கு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வைப்பதற்காக செலவு செய்யப்பட்டுள்ள தொகை தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் குண்டூர் தடேபல்லி கிராமத்துக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதே போன்று ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்கு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வைப்பதற்காக மட்டும் 73 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை கடந்த மாதம் ஆந்திர அரசு அளித்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக நடந்த மோசமான நிர்வாகத்தால் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்து இருப்பதாகவும், அதனை சரி செய்யாமல் 73 லட்சம் ரூபாய்க்கு கதவு ஜன்னல் பொருத்துவது எந்த விதத்தில் நியாயம் என, எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஜெகன் மோகன் ரெட்டியின் புது வீட்டுக்கான மின்வாரிய செலவு மட்டும் 3.6 கோடியைத் தொட்டுள்ளதாகவும், கூடுதலாகப் புது வீட்டுக்கான ஹெலிபேட் அமைக்க 1.89 கோடி ரூபாய், பக்கத்துக்கு நிலங்களை கைப்பற்றிய தொகை 3.25 கோடி ரூபாய், முதல்வர் மக்களைச் சந்திப்பதற்கான இடம் கட்டமைக்க 82 லட்சம் ரூபாய் என செலவிடப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றசாட்டுகளை சுமத்தியுள்ளார்.