'உறவினரா இருக்கணும்' ..'வாழ்நாளில் ஒரு முறைதான்' .. புதிய 'வாடகைத்தாய்'.. மசோதா!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jul 16, 2019 12:30 PM
இந்தியாவில் வாடகைத்தாய் மரபு என்பது வெகுவாக அதிகரித்துள்ளதாக அண்மையில் எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, ‘முறைப்படுத்தப்பட்ட’ வடாகைத் தாய் மசோதா நாடு முழுவதும் தனி கவனத்தைப் பெற்றுள்ளது.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு, மருத்துவத்தொழில்நுட்பத்தின் உதவியோடு, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துக் கொடுக்கும் மரபு, வர்த்தக ரீதியில் பரவி வந்தது. இடைக்காலத்தில் தொடங்கிய இந்த முறையால், தற்போது உலக அளவில், வாடகைத்தாய் வர்த்தகத்தில் இந்தியா முக்கியமான மையமாக செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனை முறைப்படுத்தும் வகையில் வாடகைத்தாய் மசோதா 2019-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்த தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்; வாடகைத் தாய் கட்டாயமாக, திருமணமாகி குழந்தை பெற்றவராகவும், 25-30 வயதுக்குட்படவராகவும் இருத்தல் வேண்டும்.
வாழ்நாளில் ஒரு பெண் ஒரு முறை மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும். நிச்சயமாக வாடகைத்தாய், குழந்தை தேவைப்படும் தம்பதியர்க்கு உறவினராக இருத்தல் அவசியம். அதே சமயம், வாடகைத் தாய் மூலம் பெறப்படும் குழந்தைகளை பெற்றோர் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடக் கூடாது என்பன போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன.