‘டாக்டர்கள் என் குழந்தையை தொடவே மாட்டேனுட்டாங்க!’.. மருத்துவமனை வளாகத்திலேயே கட்டியணைத்து அழுத தந்தை.. கடைசியில் நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேசத்தில் தலைநகர் லக்னோவில் இருந்து சுமார் 123 கி.மீ தொலைவில் உள்ள கன்னோஜ் எனும் மாவட்டத்தில் இருந்து அம்மாவட்டத்தின் அரசு மருத்துவமனைக்கு, வீங்கிய கழுத்துப் பகுதி மற்றும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தங்களது 1 வயது குழந்தையை பெற்றோர் அழைத்து வந்ததாகவும், ஆனால், மருத்துவர்கள் குழந்தையைத் தொட மறுத்துவிட்டதாகவும் கூறப்படும் சம்பவம் உலுக்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல். குழந்தையை 90 கி.மீ தூரத்தில் உள்ள கான்பூர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும், இதனால், மருத்துவமனை வளாகத்திலேயே, குழந்தையின் தந்தை, குழந்தையை கட்டியணைத்துக்கொண்டு கதறி அழுத வீடியோ இணையத்தில் பரவி நெஞ்சை உருக்கியுள்ளது. அதன் பிறகு அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்ததை பார்த்துவிட்டு, சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முன்வந்தும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய குழந்தையின் தந்தை பிரேம்சந்த், “ஆஸ்பத்திரிக்கு வந்த சில பேர் வீடியோ எடுக்க ஆரம்பிச்சப்பதான் டாக்டர்கள் எங்க குழந்தையைப் பரிசோதனை செஞ்சாங்க. அதுக்கு முன்னாடி வரைக்கும் எந்த டாக்டரும் குழந்தையைத் தொட தயாரா இல்லை. நாங்க கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் அங்கதான் இருந்தோம். கான்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு போகச் சொல்லிக்கிட்டே நான் ஏழ்மையானவன். என்னிடம் பணமே இல்ல. என்னால் என்ன செய்ய முடியும்?” என்று அழுதபடி கூறியுள்ளார். இதேபோல் குழந்தையின் தாய் ஆஷா தேவி பேசும்போது குழந்தையின் கழுத்துப் பகுதி வீங்கி இருந்ததாகவும், அதனால் நாங்கள் 30 முதல் 40 நிமிடங்கள் மருத்துவமனையில் காத்திருந்ததாகவும், அதன்பிறகு மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முன்வந்ததாகவும், ஆனால், அதற்குள் குழந்தை இறந்துவிட்டான் என்றும் மனம் உருகி அழுதுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய கன்னோஜ் மருத்துவமனை உயர் அதிகாரி ராஜேஷ் குமார் மிஸ்ரா பேசுகையில், மாலை 4:15 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவ நிபுணர் ஒருவர் குழந்தைக்கு சிகிச்சையளிக்க அவசரமாக அழைக்கப்பட்டதை அடுத்து 30 நிமிடங்களில் குழந்தை இறந்தான். மருத்துவர்கள் போராடியும் காப்பாற்ற முடியவில்லை. இதில், அலட்சியம் இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.