'வரலாற்றிலேயே முதல் முறை'... 'இந்தியாவிலிருந்து சொந்த நாட்டுக்கு வந்தா 5 ஆண்டு சிறை'... அதிரடியாக அறிவித்துள்ள நாடு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா பரவலின் 2வது அலை இந்தியாவைப் புரட்டிப் போட்டுள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வரும் நிலையில், பலி எண்ணிக்கை 4,000யை நெருங்கியுள்ளது. இந்த எண்ணிக்கை இந்தியாவை மட்டுமல்லாது உலக நாடுகளையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதனையடுத்து பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்குப் பயணத் தடை விதித்துள்ளது. அதாவது இந்தியாவிலிருந்து தங்கள் நாடுகளுக்கும், தங்கள் நாட்டிலிருந்து இந்தியாவிற்குமான நேரடி விமானச் சேவையை ரத்து செய்துள்ளது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு நேரடி விமானச் சேவையைத் துண்டித்துள்ளது.
இதன் காரணமாக வேறு நாடுகளின் விமான வழித்தடத்தைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து நேரடியாக இல்லாமல் பிற நாடுகள் வழியாக ஆஸ்திரேலியர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் கூட இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜப்மா, கனே ரிச்சர்ட்சன் ஆகியோர் இந்தியாவிலிருந்து நேரடியாக இல்லாமல் வேறு நாட்டின் வழியாக ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பியதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவிலிருந்தும் இந்தியாவுக்கு 14 நாட்களுக்குள் சென்று திரும்பிய யாரும் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்யக் கூடாது என அந்நாடு அறிவித்துள்ளது.
இதற்கிடையே வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கள் சொந்த குடிமக்களே ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் அல்லது $66,000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த புதிய விதிமுறை இன்று (மே 1) முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட SARS-CoV-2 என்ற வகை கொரோனா வைரஸ் அங்குப் பரவிவிடக்கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த முடிவை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் தரவுகளின் படி இந்தியாவில் 9,000 ஆஸ்திரேலியர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் 600 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா மற்றும் பிற நாடுகளில் சிக்கித்தவிக்கும் ஆஸ்திரேலியர்களை எந்த வகையில் மீண்டும் அனுமதிக்கலாம் என ஆஸ்திரேலிய அரசு ஆலோசித்து வருகிறது எனவும் சொல்லப்பட்டுள்ளது.