2020-ன் முதல் சந்திர கிரகணம் இன்று... நாசா வைத்த பெயர் என்ன தெரியுமா?... வெறும் கண்களாலேயே எப்போது பார்க்கலாம்?...
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Sangeetha | Jan 10, 2020 10:16 AM
2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ உள்ளது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த டிசம்பர் மாதம் தான் மிகவும் அரிய வகையில் ஏற்படும் சூரிய கிரகணம் முடிவடைந்தது. இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ உள்ளது. இன்று இரவு நடக்கவிருக்கும் சந்திர கிரகணத்தை 'பெனும்ப்ரல் சந்திர கிரகணம்' (Penumbral Lunar Eclipse) என அழைக்கின்றனர். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதையே சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். இன்று நடக்கவிருப்பது முழுமையான சந்திர கிரகணம் இல்லை. பூமியின் நிழல் கொஞ்சம் மட்டுமே நிலவின் மீது விழும். சூரியனின் வெளிச்சம் சந்திரன் மீது விழாமல் பூமியின் வெளிப்புறம் தடுக்கும்.
அப்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். அதனால் இது 'பெனும்ப்ரல் சந்திர கிரகணம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருளாகவோ அல்லது சிவப்பாகவோ மாறாது என்பதால், இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என பெயர் சூட்டியுள்ளது நாசா. இதை, இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக் பகுதிகளில் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என நாசா அறிவித்துள்ளது.
இன்று இரவு 10.37 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம், நாளை அதிகாலை 2.42 மணி வரை அதாவது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும் என்றும், 12.41 மணியளவில் சந்திர கிரகணம் முழுமையான அளவை எட்டும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இது பெனும்ப்ரல் வகை கிரகணம் என்பதால் முழு சந்திர கிரகண அனுபவத்தை பெற முடியாது என கூறப்பட்டுள்ளது.இதேபோல், இந்த ஆண்டில் ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய நாட்களிலும் சந்திர கிரகணம் நிகழும் என கூறப்பட்டு உள்ளது.