"நம்ம நாட்டுக்கு திரும்புங்க".. மெட்டா, ட்விட்டரில் பணிநீக்கம் செய்யப்பட்ட இந்தியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தொழிலதிபர்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்மெட்டா, ட்விட்டர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட இந்தியர்களுக்கு வேலை அளிக்க விரும்புவதாக அறிவித்திருக்கிறார் இந்திய தொழிலதிபர் ஒருவர். இது பலரையும் நெகிழ செய்திருக்கிறது.

பிரபல சமூக வலை தளங்களான பேஸ்புக், வாட்ஸாப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனம் மெட்டா. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக மார்க் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் நிறுவனத்தின் 13 சதவீத ஊழியர்கள் அல்லது 11,000 பேரை பணிநீக்கம் செய்வதாக மெட்டா அறிவித்தது. இது அந்நிறுவனத்தின் ஊழியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது இப்படி இருக்க, ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து 50 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தார் அதன் தற்போதைய உரிமையாளரான எலான் மஸ்க். முன்னதாக ஸ்நாப்சேட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட்டில் 20 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. ஸ்பாட்டிஃபை, மைக்ரோசாஃப்ட், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது பணியாளர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரை சமீபத்தில் பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தன.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த ட்ரீம் 11 நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஹர்ஷ் ஜெயின் புதிய அறிவிப்பை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். மெட்டா, ட்விட்டர், ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட இந்தியர்களை தனது நிறுவனத்தில் பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளார் ஜெயின்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்," அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் டெக்னாலஜி துறையில் 52,000 ற்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . இந்நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் எங்களுடைய வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்தியர்கள் (குறிப்பாக விசா பிரச்சனை உள்ளவர்கள்) தாய்நாடு திரும்புமாறு நினைவூட்டப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்களது நிறுவனம் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் தலைமை அனுபவத்துடன் கூடிய பணியாளர்களை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களில் கணிசமானவர்களை பணிநீக்கம் செய்துவரும் நிலையில், ட்ரீம் 11 நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் ஜெயின் பணிநீக்கம் செய்யப்பட்ட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வந்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

மற்ற செய்திகள்
