
ஒவ்வொரு நாளும் கொரோனா குறித்த அச்சம் உலகையே கிடுக்கிப் பிடியில் வைத்துள்ள நிலையில், இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவுவதைத் தடுக்க இந்திய அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பலர் வீட்டினுள் தனிமைப்படுத்தப்பட்டாலும் தங்கள் உயிரை மட்டுமல்லாமல் மற்றவர்கள் உயிரையும் பாதுகாக்க வழி செய்துள்ளது.
இது தவிர பொருளாதாரப் பிரச்னையால் பல துறைகள் முடங்கிக் கிடக்கிறது. அதிலும் முக்கியமாக திரைத்துறையைச் சார்ந்த பல ஊழியர்கள், துணை நடிகர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானம் இன்றி தவிக்கும் பெப்ஸி ஊழியர்களுக்காக நடிகர், நடிகைகள் உதவ முன் வர வேண்டும் என்று பெப்ஸி தலைவர் ஆர்.கே.செலவமணியின் கோரிக்கையை ஏற்று நடிகர்கள் பலர் உதவித் தொகை அளித்து வருகின்றனர்.
தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் உதவித் தொகையை பாதிக்கப்பட்ட சினிமா பெப்ஸி தொழிலாளர்களுக்கு வழங்கி உள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.