தல அஜித் சொன்னா... - நேர்கொண்ட பார்வை குறித்து காவல்துறை அதிகாரி விமர்சனம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 12, 2019 04:57 PM
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, தல அஜித் நடித்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெண்களுக்கு நிகழும் பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கும் இந்த படத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், நடிகர் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
அனைத்து துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வரும் பெண்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சட்டத்தின் துணையுடன் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை நன்கு விளக்கி, திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் பல புதிய கருத்துகளை புகுத்தியுள்ளது இத்திரைப்படம்.
நடிகர் அஜித்குமார் அவர்களின் திரைப்பயணத்தில் இத்திரைப்படம் புதிய மைல்கல் என்றே சொல்லலாம். பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பும், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியும் பாராட்டத்தக்கது.
சட்டத்தை நிலை நிறுத்துவதில் வழக்கறிஞர்களின் கடமையை இயக்குநர் ஹெச்.வினோத் சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். சமூக அக்கறையுள்ள இயக்குநர்களின் வரிசையில், இவர் முன் வரிசையில் அமர்ந்துவிட்டார் !
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் யார், எவர், அவரது பின்னணி மற்றும் சூழல் பார்க்காமல் அவர்கள் அனுமதியில்லாமல் நடக்கும் எதுவுமே குற்றமே என்ற அழுத்தமான செய்தியை லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்றோர் கூறும்போது ஏராளமானோரை சென்றடையும் என்றார்.