Bigg Boss Tamil 3 : ‘உங்களுக்கு வீடியோ.. எங்களுக்கு குறும்படம்..!’ - உண்மை வெளிய வந்ததா மீரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 28, 2019 01:54 AM
கிராம சபை கூட்டங்கள் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளை தீர்க்கும் வலிமை வாய்ந்தது என்பதை தீர்க்கமாக நம்புபவன் நான் என்று தொடங்கிய கமல்ஹாசன், தனக்கே உரிய ஸ்டைலில் வம்பு பண்ணியவர்களை வறுத்தெடுத்தார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இந்த வார இறுதியின் முதல் நாளான இன்று, கிராமிய டாஸ்க் குறித்தும், அதில் வெடித்து பூதாகரமான சர்ச்சைகள் குறித்தும் கமல்ஹாசன் விவாதித்தார். இதில் பெரும் பிரச்சனையை கிளப்பியது மீரா, இயக்குநர் சேரன் மீது மீரா வைத்த குற்றச்சாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், குறும்படத்தின் மூலம் மீண்டும் உண்மை உலகிற்கு காட்சிப்படுத்தப்பட்டது.
கிராமிய டாஸ்க்கின் போதும், பொருட்களை களவாடி சென்ற லொஸ்லியாவை கையும் களவுமாக பிடிக்க ஓடிய சேரன், அவரை பிடிக்கும் முனைப்பில், எதிர்பாராமல் அருகில் இருந்த மீராவை தள்ளிவிட்டு லொஸ்லியாவி இழுத்து வந்தார். இந்த சம்பவத்தை பூதாகரமாக்கிய மீரா, சேரன் தன்னிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாகவும், அவர் தன்னிடம் நடந்துக் கொண்ட விதம் காயப்படுத்தியதாகவும் ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை ஒட்டுமொத்த பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி தமிழக மக்களும் ஏற்கவில்லை. எனினும், பாதிக்கப்பட்டவள் தான் என்றும், தனக்கு நடந்த அநீதியை தெரிந்துக் கொள்ள வீடியோவை பார்த்தால் போதும் என்றும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.
இதையடுத்து, 34ம் நாள் எபிசோடில் கமல்ஹாசன், மீராவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க மீராவுக்கு வீடியோவும், மக்கள் மற்றும் ஹவுஸ்மேட்ஸ்க்கு குறும்பத்தை ஓட்டிக்காட்டினார். குறும்படத்தில் தெளிவாக விளையாட்டு போக்கில் நடந்த சம்பவம் என்பது அப்பட்டமாக, மீரா தனது தவறை உணராமல், தான் அந்த சமயம் உணர்ந்தவற்றை கூறியதாக தெரிவித்தார்.
மேலும், உண்மை ஒரு நாள் வெளியே வரும் அன்றைக்கு எல்லாம் புரியும் என்று மீரா கூற, ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களும் தாங்க முடியாமல் சிரித்தனர். இதற்கு மேல், ‘ஒரு உண்மை வெளி வர வேண்டுமா?’ என்று மக்கள் மனதில் எழுந்த கேள்வியை கமல்ஹாசனே முன் வைக்க, வீடியோவே உண்மை தான் மீரா. ‘குற்றச்சாட்டு வைக்கலாம், ஆனால் அது பொய்யாக இருக்கும் பட்சத்தில் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் கூட அதற்கு வலுவில்லாமல் போய்விடும்’ என்று கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார்.