இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர். குறிப்பாக அண்டை மாநிலமான தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் முன்னணி நடிகர்கள் பலரும் மாநில, மத்திய அரசுக்கு நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் பிரதமரின் நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாயும், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் என மொத்தம் 4 கோடி ரூபாய் கொரோனா நிதியாக வழங்கியுள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவ நடிகர்கள் முன்வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
பிரபாஸ் தற்போது நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் நடந்து வந்த நிலையில் அங்கிருந்து சில நாட்கள் முன்பு இந்தியா திரும்பிய மொத்த படக்குழுவும் கொரோனா அச்சம் காரணமாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். பிரபாஸும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.