பாபா, புதுப்பேட்டை நடிகர் - பிரபல எழுத்தாளர் 'பாரதி மணி' இயற்கை எய்தினார்!
முகப்பு > சினிமா செய்திகள்எழுத்தாளரும், நடிகருமான பாரதி மணி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர்.
ஆரம்பத்தில் நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த பாரதி மணி, பிறகு திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.2010-ல் நூற்றாண்டு விழா கொண்டாடிய மறைந்த பி. கக்கனாக ஒரு முழுநீள ஆவணப்படத்தில் நடித்திருக்கிறார். 1992-ல் அருந்ததி ராய் கதை வசனமெழுதிய தி எலெக்ட்ரிக் மூன் என்கிற ஆங்கிலப் படத்தின் மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார்.
மகாகவி பாரதியார் வாழ்க்கையை தழுவி உருவான பாரதி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்தார். ரஜினியின் பாபா, செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் அரசியவாதியாக நடித்து பிரபலமானார், பின் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்திலும் நடித்துள்ளார். கடைசியாக மாதவன் நடித்த மாறா படத்தில் நடித்துள்ள பாரதி மணி, இதுவே எனது கடைசிப் படம் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது
எழுத்தாளராக இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ”பல நேரங்களில் பல மனிதர்கள்” என்ற பெயரில் நூலாக வெளியானது. 2015-ல் ஒரு முழுத்தொகுப்பாக “புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” என்ற பெயரில் வம்சி புக்ஸ் பதிப்பாக வெளிவந்தது. 2019 ஆம் ஆண்டு வாசகசாலை ‘பாட்டையாவின் பழங்கதைகள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டது.
பிரபல எழுத்தாளரும், நடிகருமான பாரதிமணி உடல்நலக் குறைவு காரணமாகவும், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 84.