ஃபடாஃபட் ஜெயலக்ஷ்மி முதல் சித்ரா வரை... நடிகைகளின் தற்கொலைகள்!!! காரணங்களும் தீர்வுகளும்.?
முகப்பு > சினிமா செய்திகள்சினிமா என்பது எப்போதுமே சாமானிய மனிதர்கள் பார்வையில் ஒரு மாய உலகம் போலவே பார்க்கப்பட்டு வருகிறது. வண்ண வெளிச்சங்கள் நிறைந்து பணமும் புகழும் அளவற்ற இருக்கும் இடமாக சினிமாத்துறை மீதொரு பிம்பம் நிலவி வருகிறது. ஆனால், அந்த வெளிச்சங்களை எல்லாம் கடந்து இத்துறையில் பெரும் இருள் சூழ்ந்தே இருந்து வந்திருக்கிறது.
அப்படியான இருள் சூழ்ந்த பல சம்பவங்களை நாம் கடந்தே வந்து இருக்கிறோம். கடன் வாங்கி படம் எடுத்து தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர்களும் இங்குண்டு. காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட நடிகர்களின் கதையும் இங்குண்டு. இங்கே சினிமா கலைஞர்கள் எப்போதும் ஆடம்பரத்தில் திளைத்து, கொண்டாட்டமாகவே வாழ்பவர்கள் இல்லை என்பதை, இப்படியான சம்பவங்களால் உணர்ந்தே ஆக வேண்டியதாகிறது.
தமிழ் சினிமாவை எடுத்து கொண்டால், அதன் வரலாற்றில் பல்வேறு நடிகைகளின் தற்கொலைகள் நம்மால் பார்க்க முடிகிறது. ரஜினி, கமல் சிரஞ்சீவி என உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர் ஃபடாஃபட் ஜெயலக்ஷ்மி. ஆனால், அவரின் முடிவு தூக்கு கயிற்றில் எழுதியிருந்ததை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
அதே போல தமிழ் சினிமாவில் மிகவும் யதார்த்தமான நடிகையாக பார்த்து ரசிக்கப்பட்ட ஷோபா தனது 17-வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். தென்னிந்திய சினிமாவை கலக்கிய சில்க் ஸ்மிதா தனது 36-வது வயதில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இன்றும் அவரது மரணத்திற்கு பிறகான மர்மங்கள் பேசப்பட்டு கொண்டேதான் இருக்கிறது.
நடிகை சிம்ரனின் தங்கை மோனல் தொடங்கி எத்தனையோ ஜூனியர் ஆர்டிஸ்டுகள் வரை, தமிழ் சினிமாவில் திரையில் தேவதைகளாக கொண்டாடப்படும் கதாநாயகிகளின் முடிவு நிஜத்தில் சற்றும் எதிர்பாராத விதமாகவே இருந்திருக்கிறது.
இதோ, இப்போது சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை பார்க்க முடிகிறது. சித்ரா, அவருடன் பழகியவர்களால், ஒரு பாசிட்டீவான பெண்ணாகவே நினைவு கூறப்படுகிறார். அதுவே அவரின் தற்கொலை முடிவை சற்றும் ஏற்று கொள்ள முடியாததாகவும் மாற்றியிருக்கிறது.
என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களை மகிழ்விக்கும் மனநிலையில் இருப்பவராக இருந்தாலும், இச்சினிமாத்துறையினரின் அகம் அப்படியிருப்பதில்லை. அங்கு சொல்ல முடியாத சோகங்களும், ஆற்ற முடியாத ரணங்களும் நிரம்பி கிடக்கின்றன.
சாமானியனின் பொழுதுபோக்கிற்காக ஒரு கலைஞன் எப்போதுமே பெரும் விலை கொடுக்கிறான். ஆனால் அது அவனின் உயிர் வரை செல்வதுதான் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. இனியாவது இது போன்ற தற்கொலை சம்பவங்கள் இச்சினிமாத்துறையில் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றே ஒவ்வொரு ரசிகனும் ஒவ்வொரு கலைஞனும் விரும்புகிறான். அதற்கான தீர்வுகளை யோசிப்பதும் விவாதிப்பதும் இக்கனத்தில் மிகவும் கட்டாயமாகிறது.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வு அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சேர்ந்தவர்களுக்கோ தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், உடனடியாக உதவியை நாட தயங்க வேண்டாம் - மாநில சுகாதாரத் துறை தற்கொலை உதவி எண் - 104; சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050.