அதிகப் படங்களை கைவசம் வைத்திருக்கும் ப்ரியா பவானி சங்கர்! குவியும் பாராட்டுக்கள்!!
முகப்பு > சினிமா செய்திகள்சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு இடம்பெயர்ந்து, ஜொலித்த நடிகைகள் வெகு சிலரே உள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ப்ரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக சின்னத் திரையில் தன் பயணத்தைத் தொடங்கி, கல்யாணம் முதல் காதல் வரை எனும் மெகா தொடரில் நடித்து அதிகப் புகழ் பெற்றார். அதன் பின் ரத்னகுமார் இயக்கத்தில், மேயாத மான் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
ஹோம்லி லுக், மிகையற்ற நடிப்பு, அதிக மேக்கப் இல்லாத பளிச் முகம், அழகான புன்னகை இவைதான் ப்ரியாவின் ட்ரேட் மார்க். மேயாத மான் படத்தில் அறிமுகமான பிரியா தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பிரச்னையால் உலகமே இயக்கத்தை நிறுத்தி இருக்க, திரைத்துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த சமயத்தில் பிரியா சோஷியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
அவரது ரசிகர் ஒருவர் உங்களுடைய சம்பளம் என்னவென்று கேட்க, அதற்கு பிரியா வெளிப்படையாக ரூபாய் 360 என்று கூறியிருக்கிறார். ப்ரியா தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய போது ஒரு செய்திக்கு ரூபாய் 360 சம்பளமாக பெற்றுள்ளார் என்பதை அந்த ரசிகரால் நம்பவே முடியவில்லை. தனது பாராட்டுக்களை ப்ரியாவுக்கு தெரிவித்தார்.
2020-ம் ஆண்டைப் பொருத்தவரையில் ப்ரியா பவானி சங்கரின் நடிப்பில் நிறைய படங்கள் வெளிவரவிருக்கின்றன என்பது குறிபிடத்தக்கது. ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் பொம்மை, துல்கர் சல்மானுடன் வான், தெலுங்குப் படமான பெல்லி சூப்புலு தமிழ் ரீமேக், இந்தியன் 2, ராகவா லாரென்சுடன் ஒரு புதிய படம் மற்றும் ஒரு நேரடித் தெலுங்குப் படம் என வரிசையாக படங்களில் கமிட் ஆகியுள்ளார். கொரோனா பிரச்னையால் முடங்கிக் கிடக்கும் திரையுலகம் இயல்பு நிலைக்கு வந்ததும், ஷூட்டிங்கில் பரபரப்பாகிவிடுவார் பிரியா.
ரசிகர்களும் திரைக்கு வரவிருக்கும் அவரது படங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.