பிரபல காமெடி நடிகர் வேணு மாதவ் காலமானார்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 25, 2019 02:18 PM
பிரபல தெலுங்கு காமெடி நடிகரான வேணு மாதவ் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
தெலுங்கு திரையுலகில் கடந்த 1996ம் ஆண்டு ‘சம்ப்ரதாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் வேணு மாதவ், சுமார் 20 ஆண்டுகளில் 150-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ள வேணு மாதவ், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நீரிழிவு, ரத்தக் கொதிப்பு என பல உடல் உபாதைகள் ஏற்பட்ட காரணத்தால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வேணு, இன்று(செப்.25) பிற்பகல் 12 மணிக்கு உயிரிழந்தார்.
தெலுங்கு டிவி சேனலில் பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வேணு மாதவ், தமிழில் மாதவன், சினேகா நடித்த ‘என்னவளே’, தருண், சினேகா நடித்த ‘காதல் சுகமானது’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் வேணு மாதவின் மறைவுக்கு பிரபல தெலுங்கு நடிகர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.