ஊர்ல.. சின்ன தியேட்டர்ல ‘மீனா’ படத்தை பார்த்த ரஜினி - ‘வீரா’ ஷூட்டிங்கின்போது சுவாரஸ்யம்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை மீனா தென்னிந்திய திரைப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர்.
நடிகை மீனா, சிவாஜி கணேசன் நடித்த நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானார். நடிகை மீனா குழந்தை பருவத்திலேயே பல திரைப்படங்களை நடித்திருக்கிறார். பின்னாளில் தமிழைப் பொறுத்தவரை ராஜ்கிரணின் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் சோலையம்மாள் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் திறமான நாயகியாக வேரூன்றினார்
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்த மீனா, நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இன்றும் திரிஷ்யம் தொடர் வரிசை திரைப்படத்தில் நாயகியாக நடித்துவரும் மீனாவுக்கு அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் அவருடைய 40 ஆண்டு கால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக மீனா 40 என்கிற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரஜினியுடன் அதே மேடையில் பேசிய நடிகை மீனா, “ரஜினி சார் எத்தகைய எளிமையான குணம் படைத்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு இன்னொரு கூடுதல் சம்பவத்தை உதாரணமாக சொல்கிறேன். அப்போது வீரா திரைப்படத்தில் ரஜினி சாருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் ராஜமுந்திரி என்கிற ஊரில் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு நான் நடித்த தெலுங்கு படமான அங்கராக்ஷுடு (Angarakshakudu) என்கிற படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆகி இருந்தது.
அந்தப் படத்தை காண்பதற்காக வீரா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சார் உட்பட படக்குழுவினர் அனைவரும் என்னிடம் கேட்கின்றனர். சரி, நானும் அவர்களை அழைத்துக் கொண்டு அங்குள்ள திரையரங்கில் சென்று படம் பார்க்கலாம் என்று யோசிக்கிறேன். ஆனால் ரஜினி சாரை அழைக்கலாமா வேண்டாமா.. ஏதாவது சொல்லுவாரா .. என்கிற தயக்கம் இருந்தது. அதே சமயம் அவரிடம் சொல்லாமலும் செல்ல முடியாது; தவறாகிவிடும். எனவே ஒரு வார்த்தைக்கு நீங்கள் வறீங்களா என்று கேட்டுவிட்டு செல்லலாம் என்று கேட்டேன். ஆனால் அவர் உங்கள் படமா? இன்றைக்கு ரிலீஸ் ஆகிறதா? ஓ போகலாமே! என்றார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் இப்படி டக்குனு ஓகே சொல்லுவார் என்று எனக்கு தெரியாது! ஏனென்றால் அது ஒரு சின்ன ஊர், அங்கு இருக்கும் தியேட்டர் எப்படி இருக்கும்? என்கிற யோசனை இல்லை. எனக்கு எப்படி இவரை படத்துக்கு அழைத்துச் செல்வது என்று யோசனையாக இருந்தது. ஆனால் ரஜினி சாரோ எதைப் பற்றி யோசிக்காமல் உடனடியாக எனக்காக இந்த படத்துக்கு வருகிறேன் என்று சொன்னார். பிறகு நான் திரையரங்கத்தை தொடர்புகொண்டு விசயத்தை சொல்லி அனைவரையும் அழைத்துச் சென்றேன். அதுதான் ரஜினி சார், அவ்வளவு எளிமையான இனிமையான மனிதர் அவர்!” என்று கூறினார்.
ஊர்ல.. சின்ன தியேட்டர்ல ‘மீனா’ படத்தை பார்த்த ரஜினி - ‘வீரா’ ஷூட்டிங்கின்போது சுவாரஸ்யம். வீடியோ