Kamal Haasan : “35 வருஷத்துக்கு அப்றம் திரும்பவும் இணையுறோம்” - மணிரத்னம் படம் குறித்து கமல்..!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அவரது 234வது படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார்.

ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பாக மணிரத்னம் நாயகன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அண்மையில் மணிரத்னம் இயக்கத்திலான பொன்னியின் செல்வன் பாகம்-1 பிரம்மாண்ட சரித்திர புனைவு படமாக வெளியாகி வரவேற்பையும் வசூலையும் குவித்தது,
கமல் நடிப்பிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக கமல்ஹாசனுக்கு அமைந்தது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் சார்பில் உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்தார். இந்நிலையில்தான் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படமான கமல்ஹாசனின் 234வது படத்தினை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார்.
இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், சிவா ஆனந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்த அறிவிப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், "நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் திரு.மணிரத்னத்துடன் ஒத்த மன அமைப்பினால் இணைந்து பணிசெய்யத் தொடங்கினேன், அதே மன அமைப்பில் திரு.ரஹ்மானும்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் குறித்து கமல்ஹாசன், “திரு.உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து இந்த படத்தை வழங்க ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், இயக்குநரும் இப்படத்தினை கமல்ஹாசனுடன் இணைந்து தமது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் தயாரிப்பவருமான மணிரத்னம், "மகிழ்ச்சி, கௌரவம் மற்றும் கமல் சாருடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி உற்சாகமாக உள்ளேன்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.