இது என்னை பரவசப்படுத்துகிறது! தனது சந்தோஷத்தை நெட்டிசன்களுடன் பகிர்ந்த பிரபல நடிகை!
முகப்பு > சினிமா செய்திகள்ஆன்லைன் முதல் வாட்ஸ்அப் வரை எல்லா இடங்களிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. காரணம் அந்த அளவுக்கு கரோனா வைரஸ் குறித்த பீதி மக்களிடையே பரவி வருகிறது. இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கை சரியான சமயத்தில் எடுக்கப்பட்டுள்ளதால், இதன் பாதிப்பு அதிகளவில் இருக்காது என்று நம்பப்படுகிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வருவதில்லை.
இப்படி திடீரென்று வீட்டில் குடும்பத்தாருடன் செலவிட நேரம் கிடைத்ததற்கு பலர் மகிழ்ந்தாலும், ஒரேடியாக வீட்டிலும் இருக்க பலருக்கு முடிவதில்லை. வேறு வழியின்றி வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்து தங்கள் கவனத்தை திசை திருப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தூர்தர்ஷன் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பிரபல தொடர்களை மறு ஒளிபரப்பு செய்ய முடிவெடுத்தது. இது பலருக்கு மகிழ்ச்சி அளித்த நிலையில், பிரபல நடிகை காஜல் அகர்வால் இது குறித்த தன் கருத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியது, ''டிடி நேஷனலில் ஒளிபரப்பாகும் ராமாயணமும் மகாபாரதமும் என்னை மீண்டும் குழந்தை பருவத்திற்கே அழைத்துச் செல்கிறது. எங்கள் மொத்த குடும்பத்தையும் ஒன்றாக வார இறுதி நாட்களில் இணைத்த நிகழ்ச்சிகள் அவை. இந்த நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன், இன்றைய குழந்தைகள் இந்திய புராணங்களைக் கற்றுக் கொள்வதற்கான சிறந்த வழி இது.'' என்று பதிவிட்டுள்ளார் காஜல் அகர்வால்.