பிரபல நடிகர் வாங்கிய 2 வாழைப்பழங்களுக்கு ரூ. 442 பில் போட்ட ஸ்டார் ஹோட்டலுக்கு அபராதம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 28, 2019 04:08 PM
2 வாழைப்பழங்களுக்கு ரூ. 442 பில் போட்ட ஜே.டபுள்யூ. மாரியட் ஹோட்டலுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் சண்டிகரில் உள்ள ஜே. டபுள்யூ. மாரியட் ஹோட்டலில் தங்கினார். ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த பிறகு அவர் 2 வாழைப்பழங்கள் ஆர்டர் செய்தார்.
அவரின் அறைக்கு வாழைப்பழங்கள் கொண்டு வரப்பட்டன. 2 பழங்கள் ரூ. 442 என்று பில்லில் தெரிவிக்கப்பட்டதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் பழங்கள் மற்றும் பில்லை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு நியாயம் கேட்டார்.
இதையடுத்து சண்டிகர் கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் ராஜீவ் சவுத்ரி இது பற்றி விசாரணை நடத்தினார். அதன் பிறகு விதிகளை மீறி அதிகம் வசூல் செய்த ஹோட்டலுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். வரி விலக்கு அளிக்கப்பட்ட வாழைப்பழத்திற்கு எப்படி வரி விதித்தீர்கள் என்று விளக்கம் கேட்டு ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று ஆணையர் ராஜீவ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.