''ஒரு மாயையை நிஜமாக்க முயல்கின்றனர்'' - தமிழக முதல்வரின் அறிவிப்பு குறித்து பாரதிராஜா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 06, 2019 05:24 PM
மதுரை அருகே கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில் பழங்காலத்திய பொருட்கள் கண்டுபடிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது கீழடியில் அருட்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பிறகு இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழ்நாட்டில் தோன்றவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்கள் பலரது கருத்தாக இருந்தது.
இந்தக் கருத்துக்கு மாறாக சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம்.இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால தமிழ் மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்திருக்கின்றன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்வுடனும் ஆச்சரியத்துடனும் தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க சான்றினை சிலர் திராவிட நாகரீகம் என்றும் சிலர் இந்து நாகரீகம் என்றும் திரிக்க முயல்கின்றனர். பொய்க்கு மேல் பொய் சொல்லி ஒரு மாயையை நிஜமாக்க முயல்கின்றனர்.அந்த வரலாற்று மாய்மாலர்களின் பொய்க்கூற்றை, நடுநிலையான நேர்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியே வருகின்றனர். கீழடி நாகரீகம் என்பது தமிழரின் நாகரீகம் என்பதை உரக்க எடுத்துச்சொல்லியே வருகிறார்கள்.மேலும் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரினர்.
தமிழரின் இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டு முதல்வரான தமிழர் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,"ஆதியில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில்தான் என்று கூறி கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.அதுவும் தமிழ்நாடு தினம் கடைப்பிடிக்கப்படும் நவம்பர் 1ம் தேதி அறிவித்துள்ளார்.
நமது தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.