தனுஷ் - வெற்றிமாறனின் 'அசுரன்' தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம் - காரணம் என்ன ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான 'அசுரன்' திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. தனுஷூடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாசலம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவானது.

கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரித்த இந்த படம் தற்போது தெலுங்கில் 'நாரப்பா' என்ற பெயரில் ரீமேக்காகிறது. தமிழில் தனுஷ் நடித்த வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் நடித்திருந்த வேடத்தில் பிரியாமணியும் நடிக்கின்றனர்.  இந்த படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் வி கிரியேஷன்ஸ் இணைந்து  தயாரித்து வருகிறது. இந்த படத்தை ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சுரேஷ் புரொடக்ஷன்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ''சுரேஷ் புரொடக்ஷன்ஸ் வரலாற்றிலேயே நீளமான படப்பிடிப்பு பணிகள் கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படக்குழு தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளனர்.

நிலைமை சீரானதும் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். பொது இடங்களில் மக்கள் அதிகம் ஒன்று கூடுவதை தவிர்ப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்'' என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Entertainment sub editor