சீயான் விக்ரம் குடும்பத்தில் இருந்து.. ‘மற்றொரு நாயகன் உதயமாகிறார்..!’ - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 22, 2019 03:40 PM
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சீயான் விக்ரமின் குடும்பத்தில் இருந்து அவரது மகன் துருவ் விக்ரமை தொடர்ந்து மற்றொரு நாயகன் அறிமுகமாகிறார்.

சாருஹாசன், நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, ஜனகராஜ் நடிப்பில் வெளியான ‘தாதா 87’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமான ‘பீட்ரு’ நிறைவடையும் நிலையில் உள்ளது. இப்படத்தை நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)’ என்ற நகைச்சுவை திரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் இப்படத்தில் நடிகர் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இது குறித்து இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி கூறுகையில், “எனக்கு PRO நிகில் முருகன் அர்ஜூமனை அறிமுகம் செய்தார். சீயான் விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன் ஒரு ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் நடிக்க நடிப்பு, நடனம், சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்றுத் தேர்ந்துள்ளார் என்பது தெரியவந்தது. அவரது தோற்றம், ஹேர்ஸ்டைல் பிடித்தது. இந்த படத்தில் நான் நினைத்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் அறிமுகம் செய்கிறேன்” என்றார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி முதல் தொடங்குகிறது. இதில் அர்ஜூமன், ஐஸ்வர்யா தத்தா மற்றும் மொட்ட ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் திருச்சி மற்றும் கோவாவில் படமாக்கப்பட உள்ளது.
இப்படத்தை GDR நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க தீபன் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார்.