"பயோ வெப்பன்!".. டிவி விவாதத்தில் பேசிய பெண் இயக்குநர் மீது தேசத்துரோக வழக்கு!
முகப்பு > சினிமா செய்திகள்லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை விமர்சித்ததாகவும் பிரிவினையை தூண்டக் கூடிய வகையில் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஆயிஷா சுல்தானா மீது வழக்கு தொடரப்பட்டது.
குஜராத் மாநில பிரபுல் கோடா படேல் லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்று 5 மாதங்கள் ஆன நிலையில், லட்சத்தீவுகளில் மது விற்பனைக்கு அனுமதி, மாட்டு இறைச்சிக்கு தடை உள்ளிட்ட அடக்குமுறைகள் திணிக்கப்படுவதாகவும் லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் மீது புதிய நெருக்கடிகள் தரப்படுவதாகவும் எனவே பிரபுல் கோடா படேலை இந்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் பல தரப்பு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர்.
குறிப்பாக நில உரிமைகள் தொடர்பான விதிகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முயல்வதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சத்தீவை காப்பாற்றுங்கள் என கேரள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் குரல் எழுப்பியும் ட்விட்டரில் ஹேஷ்டேகுகளை பதிவிட்டும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கேரளாவுக்கு நடைபெற்று வந்த சரக்கு போக்குவரத்து, இனி கேரளாவில் இருந்து மங்களூருவுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானதற்கும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில் லட்சத்தீவுகளுள் ஒன்றான ஷட்லட் தீவை சேர்ந்த சேர்ந்த பிரபல பெண் டைரக்டரும், நடிகையும், சமூகசெயற்பாட்டாளருமான ஆஷா சுல்தானா பிரபல மலையாள தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றபோது கொரோனா பாதிப்பே இல்லாத லட்சத்தீவுகளில் பிரபுல் கோடா படேல் தொற்று பரவலை செய்வதாகவும், லட்சத்தீவுகளை அழிக்க இந்திய அரசு அனுப்பி வைத்த உயிரியல் ஆயுதம் தான் அவர் என்றும் கடுமையாக சாடினார்.
இவரது இந்த பேச்சை அடுத்து லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் பாஜக தலைவர் அப்துல் காதர் கவரொட்டி காவல் நிலையத்தில் ஆயிஷா சுல்தானா மீது தேச விரோத புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அவர் மீது 124A மற்றும் 153B ஆகிய பிரிவுகளின் பேரில் பிரிவினை தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பற்றி முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஆயிஷா, தமது கருத்துக்களில் உறுதியாகவே இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவுகளில் மொத்தம் 36 தீவுக்கூட்டங்கள் உள்ளன. இதில் 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றன. ஆனால் 11-வது தீவில் வணிக பயன்பாட்டிற்காக ஓட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளில் அரசு அதிகாரி ஒருவரும் பயணிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவுகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களை தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் நிர்வாக தரப்பில் குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்த சூழலில் இவ்வாறு பேசியுள்ள ஆயிஷா சுல்தானா மீது கேரளாவிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.