உலகமே கொரோனாவின் அச்சத்தில் செயலற்றுப் போய் இருக்க, ஒவ்வொரு நாளும் திகில் படம் பார்ப்பது போன்ற ஒரு சூழலில் மக்கள் சிக்கியுள்ளனர். ஒரு ப் பக்கம் பாசிட்டிவிட்டி பற்றிய கருத்துக்கள் பரவி இருந்தாலும், இன்னொரு புறம் சக மனிதர்களின் மரணம் அச்சுறுத்துவதாகவே உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் திரைத்துறை முடங்கிப் போய் உள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் வசிக்கும் நடிகை ஷர்மிளா மந்த்ரே ஊரடங்கு உத்தரவை மீறி நண்பருடன் தனது விலை உயர்ந்த ஜாக்குவார் காரில் வெளியே சென்றுள்ளார். பெங்களூரு மத்திய வணிகப் பகுதியான வஸந்த் நகர் அண்டர்பிரிட்ஜில் சென்று கொண்டிருதபோது கட்டுப்பாட்டை இழந்த கார், நிலை தடுமாறி ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரையும் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஷர்மிளா ‘சஜ்னி’ என்ற கன்னடப் படம் மூலம் சாண்டல்வுட்டில் அறிமுகமானவர். தொடர்ந்து தமிழில் ‘மிரட்டல்’ படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்தப் படங்கள் அதிகம் கவனம் பெறாத நிலையில் ’இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’, ’சண்டைக்காரி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு சமயத்தில் காரில் வெளியே சென்றதும், விபத்தில் சிக்கியதும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
இந்த வழக்கை பதிவு செய்த போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்று வலி காரணமாக தனது நண்பர் லோகேஷ் வசந்த் என்பவருடன் மருத்துவமனைக்குச் சென்றபோது எதிர்பாராமல் இந்த விபத்து ஏற்பட்டது என்று ஷர்மிளா விசாரணையில் தெரிவித்தார்.
சோஷியல் மீடியாவில் நடிகையின் இந்தச் செயல் விமர்சிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.