பிரபல நடிகை சார்மி கவுர் இனி நடிக்கப்போவதில்லை என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு தமிழில் பிரபல இயக்குநர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் சிம்பு உடன் இணைந்து அறிமுகமானவர் நடிகை சார்மி கவுர். அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
முன்னணி ஹீரோயினாக மட்டுமின்றி பாடல்களுக்கு நடனமாடுவது என நடித்து வந்த சார்மி, கடந்த 2015ம் ஆண்டு ‘ஜோதி லக்ஷ்மி’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். பூரி ஜெகன்னாத் இயக்கிய இப்படத்தின் நாயகியாக சார்மியே நடித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சார்மி, இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும், தயாரிப்பு பணியில் மட்டுமே கவனம் செலுத்தவிருப்பதாக அதிரடி அறிவிப்பை வெறியிட்டார்.
இயக்குநர் பூரி ஜெகன்னாத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பூரி கனெக்ட்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு பணிகளை கவனிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ராம் பொத்தினேனி நடித்து வரும் ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ திரைப்படத்தில் தயாரிப்பாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.