நடிப்பு பிரதானமாக இருந்தாலும் சமூக சேவையிலும் சமூக நலனுக்காக அக்கறை செலுத்துபவர்களில் நடிகர் கார்த்தியும் ஒருவர். அவருக்கு நடிப்பைத் தாண்டி விவசாயத்தில் ஆர்வம் அதிகம் என்பது அனைவரும் அறிந்தது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்துள்ளார். மேலும், விவசாயத்தை மையப்படுத்தி பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பைத் நடிகர் கார்த்தி துவங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டதே இந்த அமைப்பு. விவசாயிகளை பாராட்டும் பொருட்டு இந்த அமைப்பின் மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும். மேலும், உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளை கண்டுபிடிக்கும் போட்டிகளை அறிவித்திருக்கிறோம்’.
‘சிறு, குறு விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும்’ என்று நடிகர் கார்த்தி கூறினார்.
தற்போது ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கைதி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, ‘ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து ஒரு படத்திலும் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார்.