'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் இன்றோடு வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கார்த்திக் - ஜெஸ்ஸி என்ற இரண்டு கதாப்பாத்திரங்களை மையப்படுத்தி அவ்வளவு சுவாரஸியமாக திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குநர் கௌதம் மேனன்.

இந்த படத்தின் பார்ட் 2 குறித்து கடந்த சில வருடங்களாக பேச்சு அடிபட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இயக்குநர் கௌதம் மேனனின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து சொல்லி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 26) அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விண்ணைத் தாண்டி வருவாயா பார்ட் 2 குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ''விடிவி படத்துல கார்த்திக் அடுத்த 10 வருஷத்துல என்ன பண்ணுவான் என்பதன் அடிப்படையில் என் டீமுடன் விவாதித்திருக்கிறேன். சிம்பு ஓகே சொன்னால், நாங்கள் விடிவி 2 படத்தை ஆரம்பிப்போம்.
சிம்பு சம்மதித்தால் மட்டுமே இந்த படம் நடக்கும். இது கார்த்திக் பற்றிய படம். அதனை சிம்பு தான் நடிக்க வேண்டும். மற்றொரு நடிகரை என்னால் அந்த வேடத்தில் நினைத்து பார்க்க முடியவில்லை'' என்று பேசினார்.