நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘தல 59’ திரைப்படத்திற்கு பாரதியாரின் பாடல் வரிகளை கொண்டு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிட்டுள்ளனர்.
கவிஞர் பாரதியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளில் முன்னுரிமை பெற்றுத் திகழ்ந்தது பெண்ணுரிமை. பெண்களுக்கு உரிமைகள் கொடுக்காத சமுதாயம் முன்னேற வழியில்லை என்பதை அழுத்தமாக தனது பாடல்கள் மூலம் சொன்னார்.
அவர் கண்ட புதுமைப்பெண் பாடலில் ‘நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு இவையே செம்மை மாதருக்கு அழகு’ என பெண்ணுக்கு புது இலக்கணம் உருவாக்கினார்.
இந்நிலையில், இப்படத்தில் புதுமைப்பெண்களாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங் ஆகியோர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு நேர்கொண்ட பார்வையுடன் அஜித் எப்படி தீர்வு காண்கிறார் என்பதே இப்படம் என்பதால், இதைவிட பொருத்தமான தலைப்பு இருந்திருக்க முடியாது.
அஞ்சியும் அடங்கியும் தலை குனிந்தும் நடப்பவளே பெண் எனும் பழமை வாய்ந்த கருத்துக்களுக்கு மாறாக பாரதி காண நினைத்த புதுமைப்பெண்ணை அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் திரையில் காணலாம்.